மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் பற்றாக்குறை: மற்றும் ஒரு நெருக்கடியில் உக்ரைன்!

By காமதேனு

ரஷ்யா தொடுத்திருக்கும் போர் காரணமாக உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பாதிப்புகளில் ஒன்று மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை. இன்னும் 24 மணி நேரத்தில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என உலக சுகாதார நிறுவனம், இரு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது. இன்றைக்கு நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

விபத்தில் சிக்கியவர்கள், கர்ப்பிணிகள் தொடங்கி கரோனா நோயாளிகள் வரை பலருக்கும் மருத்துவ ஆக்சிஜன் இன்றியமையாதது. உக்ரைனில் இன்றைய தேதியில் 1,700-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். பிப்ரவரி 24-ல் ரஷ்யப் படைகள் ஊடுருவியது முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனப் போக்குவரத்தும் முடங்கிவிட்டது. இதனால், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை உக்ரைன் எதிர்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளிலிருந்து அவற்றை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது முடங்கிவிட்டதால் உக்ரைனில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் மற்றும் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி க்ளூக் பிப்ரவரி 28-ல் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், “ஏற்கெனவே சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் பல முக்கிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்துவிடக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போரின் காரணமாக, மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜியோலைட் எனும் வேதிப்பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, உக்ரைனின் அண்டை நாடான போலந்திலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களைக் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டுமல்ல, மின்சாரப் பற்றாக்குறையையும் உக்ரைன் மருத்துவமனைகள் எதிர்கொண்டிருக்கின்றன. அடிப்படையான மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில மருத்துவமனைகளில் கையுறைகள் கூட இல்லை எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களின் சாலைகளில் டாங்குகள் அலைந்து திரிந்து தாக்குதல் நடத்துகின்றன. ஏவுகணைத் தாக்குதல்கள், வெடிகுண்டு தாக்குதல்கள் என ரஷ்யப் படைகள் தொடர்ந்து அழிவை ஏற்படுத்திவருகின்றன. இவற்றுக்கு நடுவே அவசரகாலத்துக்கு ஆம்புலன்ஸ்கள் செல்வதும் ஆபத்தான விஷயமாகிவிட்டது. இதனால், போரில் காயமடைந்து சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்படுபவர்கள் மிக மோசமான நிலையை எதிர்கொள்கிறார்கள். மருத்துவமனைகள் மீதும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்துவருகின்றன என்பது மற்றொரு துயரம்.

உலக சுகாதார நிறுவனத்தின் துணையுடன் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவத் துறையில் முன்னேற்றங்களை அடைந்துவந்த உக்ரைன், இந்தப் போரால் மருத்துவக் கட்டமைப்பில் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி உதவிய நாடுகளில் உக்ரைனும் ஒன்று என்பதும், மருத்துவப் படிப்புகளுக்கு அதிகக் கட்டணம் இல்லை என்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு சென்று மருத்துவம் பயின்று வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE