உக்ரைன் நெருக்கடியை உருவாக்கியது அமெரிக்க மாஃபியா: இறங்கி அடிக்கும் ஈரான்!

By சந்தனார்

உக்ரைன் நெருக்கடியைத் தணிக்க வேண்டுமெனில், அதன் மூலக் காரணத்தைத் தெரிந்துகொண்டாக வேண்டும் என்று கூறியிருக்கும் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, அந்த மூல காரணம் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள்தான் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இன்று (மார்ச் 1) தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய அயதுல்லா, அமெரிக்காவின் மாஃபியா ஆட்சி, ஐஎஸ் உருவாக்கம் உட்பட உலகமெங்கும் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்குகிறது என்றும், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு, வலுக்கட்டாயமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மேற்கத்திய ஆதரவு அரசுகளை நிறுவுகிறது என்றும் குற்றம்சாட்டினார். மேற்கத்திய நாடுகளின் அந்தக் கொள்கைகளுக்கு உக்ரைனும் பலியாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் படைகள் விலகிக்கொண்டதால் தாலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தான் சென்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உக்ரைன் நெருக்கடி மூலம் இரண்டு பாடங்களை உலக மக்களும் அரசுகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என அயதுல்லா குறிப்பிட்டார். முதலாவது மேற்கத்திய நாடுகள் நம்பகத்துக்குரியவை அல்ல. இரண்டாவது பாடம் - பொதுச் சமூகத்தின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் கொண்டது.

மக்கள்தான் அரசுதான் அரசின் முக்கியமான ஆதரவுத் தளம் என்றும், உக்ரைன் மக்கள் தங்கள் அரசை முழுமையாக ஆதரித்திருந்தால் இன்றைக்கு இருக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகியிருக்காது என்றும் அவர் கூறினார்.

ஒரு மணி நேரத்துக்கு நீண்ட அந்த உரையில், ரஷ்யா பற்றி ஒரு முறைகூட அயதுல்லா பேசவில்லை. அதற்கு முக்கியக் காரணம், ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு. நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவைப் பேணும் ஈரானும் ரஷ்யாவும் தற்போது இரு தரப்பு உறவை விஸ்தரிக்கும் முனைப்பில் உள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ மீது ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, “நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை மேற்கொண்டது, சுதந்திர நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குக் கடும் அச்சுறுத்தல் ஆகும்” என புதினிடம் கூறினார். இந்தப் பிரச்சினையின் முடிவில், கிழக்கு ஐரோப்பியப் பிராந்திய நாடுகளுக்கு நன்மையே விளையும் என அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி

2015-ல் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான அணு ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விலகிக்கொண்டது அந்த ஒப்பந்தத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான், விரிவான கூட்டு செயல் திட்டத்தை (ஜேசிபிஓஏ) மீறி அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில், ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. 2021 ஏப்ரல் மாதம் முதல் இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது வியன்னாவில் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றியது ரஷ்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE