இயற்கை எரிவாயு தட்டுப்பாடு: ரஷ்யாவுக்கு மாற்றாக ஆப்பிரிக்கா கைகொடுக்குமா ஐரோப்பாவுக்கு?

By காமதேனு

ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு தேவையில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவிலிருந்து கிடைப்பதுதான். ஐரோப்பாவுக்கு ஆண்டுதோறும் 150 முதல் 190 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை ரஷ்யா விநியோகித்துவந்தது. இதனாலேயே ரஷ்யாவிடம் மென்மையான போக்கை ஐரோப்பிய நாடுகள் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்டு. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர், அதற்கு முடிவுகட்டும் என்றே தெரிகிறது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கிய பின்னர், ரஷ்யாவின் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டமான ‘நார்டு ஸ்ட்ரீம் 2’-க்கான ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்திருக்கிறது ஜெர்மனி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் வகையில் விரிவாக்கப்பட்ட திட்டம் இது.

11 பில்லியன் டாலர் செலவில் மாஸ்கோவைச் சேர்ந்த காஸ்ப்ரோம் எனும் நிறுவனம் நடத்தும் இந்தத் திட்டம் மேற்கு சைபீரியாவிலிருந்து ஜெர்மனி வரை குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன்னர் ரஷ்யாவுக்கு மாற்றாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்கலாம் என்றும், அதன் மூலம் எரிபொருளுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து ஐரோப்பிய நாடுகளை விடுவிக்கலாம் என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ போன்ற அமெரிக்க இதழ்கள் யோசனையை முன்வைத்தன.

இதற்கிடையில், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயு விநியோகிப்பது குறித்த பரிசீலனையில் கத்தார் இறங்கியது. ஆனால், ஐரோப்பாவின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீடித்த விநியோகத்தைக் கத்தாரால் செய்ய முடியுமா எனும் கேள்வியால், இந்த யோசனை மறுபரிசீலனையில் உள்ளது.

போர் தொடங்கியதுமே எரிவாயு விலை மளமளவென அதிகரித்துவிட்டது. இதையடுத்து எரிவாயு விநியோகத்தில் ரஷ்யாவுக்கு மாற்றாக ஐரோப்பாவுக்குக் கைகொடுக்கப்போவது யார் எனும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், அந்த இடத்தை ஆப்பிரிக்க நாடுகள் இட்டு நிரப்புமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சமீபத்தில், உக்ரைன் நிலவரம் குறித்து தான்சானிய அதிபர் சமியா சுலுஹு, இந்தப் போரால் ஆப்பிரிக்காவுக்கு வெளியிலும் எரிவாயு விற்பனை செய்யும் வாய்ப்பு தான்சானியாவுக்கு உருவாகியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஐரோப்பிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அல்ஜீரியா வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்க நைஜீரியவும் திட்டமிடுகிறது. நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இவ்விஷயத்தில் ஆர்வம் உண்டு.

அபரிமிதமான இயற்கை எரிவாயு வளம் கொண்ட கண்டம் என்றாலும், ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டங்களுக்குப் பெரும் முதலீடு தேவைப்படும். மொஸாம்பிக் போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர் போன்ற பிரச்சினைகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி எரிவாயுவை ஆப்பிரிக்க நாடுகள் ஐரோப்பாவுக்குக் கொண்டு சேர்க்க முடிந்தால், ரஷ்யாவைப் பெருமளவில் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் விடுபடும். ஒருவகையில் ரஷ்யாவின் கொட்டமும் அடங்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE