ஹிட்லர் தாக்குதலுக்குப் பின்னர் தாக்குதலுக்குள்ளாகும் கீவ், கார்கிவ்!

By காமதேனு

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யாவின் டாங்குகள் அடங்கிய மாபெரும் ராணுவ அணிவகுப்பு. கார்கிவ் நகரத்தின் குடியிருப்புகள், அரசுக் கட்டிடங்கள் எனப் பல்வேறு இடங்களில் ரஷ்யப் படைகள் இன்று குண்டுவீசித் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. இதில் உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 70 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய மாணவர் நவீன் குமார் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

கீவ் மற்றும் கார்கிவ் இரண்டு நகரங்களும் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் படைகளால் தாக்குதலுக்குள்ளானவை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நகரங்கள் வேறொரு நாட்டின் தாக்குதலுக்குள்ளாவது இதுவே முதல் முறை.

1941 செப்டம்பர் மாதம், ஜெர்மன் நாஜி படைகள் கீவ் நகரத்துக்குள் நுழைந்து இரண்டே நாட்களில் 30,000-க்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அங்கு நிலைகொண்டிருந்த ஜெர்மன் படைகள் அடுத்துவந்த சில மாதங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தன.

1941 அக்டோபரில் கார்கிவ் நகரில் ஹிட்லரின் படைகளை எதிர்த்துப் போரிட்டது, இன்றைக்கு உக்ரைனைக் கபளீகரம் செய்யும் அதே ரஷ்யாதான். கார்கிவ் நகர எல்லையில் நுழைந்த ஜெர்மனி ராணுவம் நான்கே நாட்களில் அந்நகரைக் கைப்பற்றியது. அன்றைக்கு சோவியத் ஒன்றியமாக இருந்த அந்தப் பெரும் தேசத்தில் உக்ரைனும் ஓர் அங்கமாக இருந்தது.

ரஷ்ய அதிபர் புதின்

தற்போது புதின் தலைமையிலான ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைன் தலைவர்கள், ஹிட்லரின் தாக்குதலையும் புதினின் தாக்குதலையும் ஒப்பிட்டுப் பேசிவருகின்றனர்.

இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஸ்லென்ஸ்கி பிப்ரவரி 25-ல் பேசியபோது, “இன்று இரவு கீவ் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வீச்சுத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறீர்கள். இது 1941-ம் ஆண்டை நினைவுபடுத்துகிறது” என ரஷ்யாவுக்கான செய்தியாகக் குறிப்பிட்டிருந்தார். உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவிலேயே பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதைச் சுட்டிக்காட்டிய ஸெலன்ஸ்கி, “போராட முன்வந்த ரஷ்யர்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்குச் செவிமடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். நீங்கள் எங்களை நம்பத் தொடங்கியிருக்கிறீர்கள். எங்களுக்காகப் போராடுங்கள். போருக்கு எதிராகப் போராடுங்கள்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா, “1941 ஜெர்மனியின் நாஜி படைகளால் தாக்கப்பட்டதுதான் தலைநகர் கீவ் மீதான கடைசித் தாக்குதல். உக்ரைன் அந்தத் தீயசக்தியை வீழ்த்தியது. இதையும் (ரஷ்யா) வீழ்த்தும். புதினைத் தடுத்து நிறுத்துங்கள். ரஷ்யாவைத் தனிமைப்படுத்துங்கள்” என ட்வீட் செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE