உச்சமடையும் உக்ரைன் போர்: பொதுமக்களைக் கொல்லும் ரஷ்யப் படைகள்!

By காமதேனு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகள், வேண்டுமென்றே குடியிருப்புகள், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களைக் குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாகவும், அதன் மூலம் உக்ரைனியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் ஆலோசகர் மிகைய்லோ போடோல்யாக் குற்றம்சாட்டியிருக்கிறார். “மக்களிடம் பீதி, பொதுமக்கள் உயிரிழப்பு, கட்டிடங்கள் சேதம் - இதுதான் ரஷ்யாவின் நோக்கம். உக்ரைன் கவுரவத்துடன் போரிடுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் தலைநகர் கீவின் வடக்குப் பகுதியில் 40 மைல் நீளத்துக்கு ராணுவ டாங்குகள் அடங்கிய அணிவகுப்பை நடத்திய ரஷ்யா, தற்போது அந்தப் படைகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனால் உக்ரைனில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது.

உக்ரைன் தலைநகர் கீவுக்கும் கார்கிவ் நகருக்கும் இடையில் உள்ள ஒக்டிர்கா ராணுவத் தளத்தின் மீது ரஷ்யா இன்று நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகளின் குண்டுவீச்சில் பள்ளிகள், வீடுகள் என ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்திருக்கின்றன. குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

“இந்தப் போர், தெற்குப் பகுதியில் உள்ள தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கானது அல்ல; மாறாக ஆபத்தான தேசியவாதிகளான உக்ரைனியர்களின் ராணுவக் கட்டமைப்பை அழிப்பதற்கானது தான்” என ரஷ்யா கூறியிருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு நடவடிக்கை’ என்று ரஷ்யா வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE