சத்ய நாதெள்ளா மகன் காலமானார்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரங்கல்!

By காமதேனு

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா நேற்று (பிப்.28_ காலமானார். அவருக்கு வயது 26.

பிறக்கும்போதே பெருமூளை வாதம் எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜைன். இந்தப் பாதிப்பால் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோய் ஏற்படும். இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் பொதுவாக நிற்கவோ நடக்கவோ முடியாது.

2014-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்ய நாதெள்ளா, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் வகையிலான வசதிகளை உருவாக்குவதில் அந்நிறுவனத்துக்கு வழிகாட்டினார். தனது மகனை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை மனதில் கொண்டே அவற்றை உருவாக்கியதாக அவர் கூறியது உண்டு.

ஜைன் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஸ்பெர்ரிங், மருத்துவமனை இயக்குநர் குழுமத்துக்கு அனுப்பிய செய்தியில், “சிறப்பான இசை ரசனையும், பிரகாசமான புன்னகையுமாக இருந்தவர் ஜெயின். அவரை நேசித்த அவரது குடும்பத்துக்கு நிறைந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜைன் காலமான தகவலைக் குறிப்பிட்டு, சத்ய நாதெள்ளாவின் குடும்பத்துக்கு மன தைரியம் அளிக்க பிரார்த்தனை செய்யுமாறும், தனது மகனை இழந்த நாதெள்ளா தனிமையில் துக்கத்தை அனுபவிக்கும் வகையில், அவரது தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE