தடை நடவடிக்கைகளால் பணிந்துவிடுவாரா புதின்?

By ஆர்.என்.சர்மா

உலகமே கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்யாவின் ராணுவத் தாக்குதல் நிற்கும் அல்லது குறையும் என்பதற்கான அறிகுறி இல்லை. ஆனால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக எடுத்துள்ள ‘தண்டனைத் தடை நடவடிக்கைகள்’ (பொருளாதாரத் தடை உள்பட) உடனடியாகப் பலன் தராவிட்டாலும் ரஷ்யாவின் வேகத்தைக் குறைக்க உதவும். ரஷ்யா தான் இப்போது உக்ரைன் மீது படையெடுத்து தலைநகர் கீவிலேயே துருப்புகளை இறக்கி சண்டையிடுகிறது. எனவே சர்வதேச சட்டப்படி இறையாண்மையுள்ள சுதந்திர நாட்டின்மீது அத்துமீறி நுழைந்த குற்றத்தை ரஷ்யா செய்திருக்கிறது. ரஷ்யா இதை தன்னுடைய பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கை என்று கூறினாலும் இது அத்துமீறிய செயல் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னென்ன தடைகள்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பல தடை நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துகளை முடக்கி வைக்க பிரிட்டன் உத்தரவிட்டிருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய தொழிலான கச்சா பெட்ரோலிய எண்ணெய் அகழ்வு, நிலவாயு தயாரிப்பு ஆகியவற்றுக்குத் தேவைப்படும் உயர் தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் உதிரி பாகங்களையும் விற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் அணு நிலையங்களுக்குத் தேவைப்படும் சாதனங்கள், உதிரி பாகங்களுக்கும் இதே தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் பிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ‘ஸ்விஃப்ட்’ அமைப்பு மூலம் நிதிபரிமாற்றம் தொடர்பான தகவல் தொடர்புக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விஃப்ட் என்பது வங்கிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு அமைப்பாகும். பெல்ஜியம் நாட்டில் தலைமையகம் உள்ள இத்துடன் உலகின் 11,000 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் இதை அன்றாடம் பயன்படுத்துகின்றன. நிறுவனங்கள், அரசுகள், பெருந்தொழிலதிபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படுவதையும் அந்தக் கணக்குகளிலிருந்து பணம் பெறப்படுவதையும் உடனுக்குடன் தொடர்புள்ளவர்களுக்குத் தெரிவிப்பது மட்டும்தான் இதன் வேலை. ஒரு நாளைக்கு நான்கு கோடி தகவல்கள் இதன் மூலம் பரிமாறப்படுகின்றன. லட்சம் கோடிகளில் டாலர்கள் கைமாறுகின்றன. இந்த மொத்தத் தகவல்களில் ரஷ்யா தொடர்பானது ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் என்றாலும் அதுவே ரஷ்யாவின் நிதிப் பரிமாற்ற நடவடிக்கைகளைப் பெருமளவில் பாதித்துவிடும்.

இதற்கு மாற்று இல்லாமல் இல்லை, ஆனால் அந்த வழிகள் மூலம் தகவல்களைப் பரிமாற நாட்கள் பிடிக்கும் என்பதுடன் தரகு – சேவைக்கட்டணம் என்று செலவும் அதிகமாக இருக்கும். அத்துடன் மாற்று வழிகளை ரஷ்யா கையாண்டாலும் அதன் மீது தடை விதித்த நாடுகள் அவற்றுக்கும் தடை விதித்தால் அல்லது ஏற்க மறுத்தால் ரஷ்யாவுக்கு நிச்சயம் பிரச்சினைகள் ஏற்படும். ரஷ்யா தனது பொருளாதாரத் துறையின் தொடர் வளர்ச்சிக்குப் பொருள்களை வாங்கவும், தான் தயாரிக்கும் பொருள்களை விற்கவும் மிகவும் இடர்பட நேரும். இது அதனுடைய பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும். நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு வான் எல்லையை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துவிட்டன. இதுவும் ரஷ்ய பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தும்.

ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் அளித்த தங்க கடவுச் சீட்டுகளை நிறுத்திவிட எல்லா நாடுகளும் முடிவு செய்துள்ளன. இது சலுகை மறுப்பு மட்டுமல்ல, பெரும் பணக்காரர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.

ரஷ்ய மத்திய வங்கிக்குச் சொந்தமான சொத்துகளை பிரிட்டன் அப்படியே முடக்கியுள்ளது. இதனால் அவற்றை ரஷ்ய அரசாலும் தனி நபர்களாலும் பயன்படுத்த முடியாது. இதனால் சர்வதேசச் செலாவணி சந்தையில் ரூபிளின் மதிப்பு சரிவதுடன் வியாபார நடவடிக்கைகள் குறையும்.

ஈரான் முன்னுதாரணம்

அணு ஆயுத உடன்பாட்டை மீறுவதாகக் கூறி ஈரான் மீது மேற்கத்திய நாடுகள், எண்ணெய் வள நாடான ஈரான் மீது 2012-ல் பொருளாதாரத் தடை உள்ளிட்ட தண்டனைத் தடை நடவடிக்கைகளை அறிவித்தன. அதனால் அதன் எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டதுடன் அதன் வெளிநாட்ட வர்த்தகமும் 30 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவது ஈரானுக்குப் பெரிய சவாலாகவே தொடர்கிறது.

பொருளாதாரத் தடையை ஏற்கெனவே கிரைமியாவை ரஷ்யா கைப்பற்றியபோதும் மேற்கத்திய நாடுகள் விதித்தன. ஆனால் அது அரை மனதாகவே நிறைவேற்றப்பட்டது.

காரணம் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயுவைத்தான் பெரிதும் நம்பியிருக்கின்றன. இப்போதும் அதே நிலைதான் என்றாலும் தேவைப்படும் எண்ணெய், எரிவாயுவுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தன்னிடமிருந்து எண்ணெய், நிலவாயு வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமெரிக்கா அறிவித்திருக்கிறது. ஜெர்மனியும் தனது பயன்பாட்டுக்காகவே ரஷ்யாவிலிருந்து பெரும் பொருள் செலவில் மிகுந்த அக்கறையுடன் மேற்கொண்ட நோர்ட் – 2 எரிவாயு குழாய்ப் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவதை இப்போது நிறுத்தி வைத்திருக்கிறது. இது நிச்சயம் ரஷ்யாவை பாதிக்கும். அதன் ஒப்பந்த விதிகள் எப்படியிருந்தாலும் இவ்வளவு தொலைவு குழாய் பதித்த திட்டத்தை ஜெர்மனி ஏற்க மறுத்தால் ரஷ்யாவுக்கு அது பின்னடைவுதான். பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் உள்ள நட்புறவு இதனால் குலையும்.

சமாளிக்குமா ரஷ்யா?

அடுத்ததாக, பொருளாதாரத் தடை வந்தால் சமாளிப்பதற்காக உள்நாட்டுக்குள் பணம் இல்லாமலேயே தேசிய அட்டை மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ள ரஷ்யா மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது உற்ற நண்பனாக விளங்கும் சீனாவுடன் ரூபிள்கள் மூலமே வரவு – செலவை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் ரஷ்யாவுடன் சீன வர்த்தகம் என்பது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமே. என்னதான் நண்பனாக இருந்தாலும் பெரும் வர்த்தக வாய்ப்பை சீனா நட்புக்காக இழக்க முடியாது. அது அதனுடைய பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கும். எனவேதான் உக்ரைனுடன் பேச்சு நடத்துமாறு சீனா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.

ரஷ்யா எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற நாடு இல்லை. அதற்கு முக்கியமான இயந்திரங்கள், கணினிகள் – செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிப்புகள் போன்றவை இறக்குமதி மூலம்தான் பூர்த்தியாகிறது. எனவே மேற்கத்திய நாடுகள் அவற்றின் மீது விதித்திருக்கும் தடை ரஷ்யாவை நிச்சயம் பாதிக்கும்.

உக்ரைன் மக்கள்தொகை சுமார் 4 கோடி. ரஷ்ய மக்கள்தொகையோ அதைப் போல மூன்று மடங்கு. ஆனால் உக்ரைனை ரஷ்யா விட்டுக்கொடுக்க மறுப்பதற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகொள்ள வசதியான துறைமுகம் உக்ரைன் வழியாகத்தான் அதற்குக் கிடைக்கிறது. ரஷ்ய நாட்டின் கடலோரத் துறைமுகங்கள் ஆண்டின் பெரும்பகுதியில் பனியால் உறைவதால் அங்கே போக்குவரத்துக்கு வாய்ப்புகள் குறைவு.

இந்தப் போர் அல்லது முற்றுகை நீடித்தால் ஏராளமான உக்ரைனியர்கள் பக்கத்தில் உள்ள போலந்து, மால்டோவா, ருமேனியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல வேண்டிவரும். இப்போதே ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி அண்டை நாடுகளில் தஞ்சம் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இது மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ரஷ்யாவுக்குள்ளேயே ஏராளமானோர் இந்தப் போர் நடவடிக்கையை விரும்பவில்லை. ரஷ்யாவுக்கு நெருக்கமான பழைய சோவியத் நாடுகளில் ஒன்றிரண்டுதான் அதற்கு ஆதரவாக இருக்கின்றன. மற்றவை நடுநிலை வகிக்கின்றன. இந்தக் காரணங்களாலும் புதின் முடிவை மறு பரிசீலனை செய்தாக வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE