பிரிட்டனுடன் கூட்டு போர் பயிற்சி: இந்தியாவின் நிலைப்பாடு மாறியதா?

By காமதேனு

உக்ரைன் போர் நிலவரங்களால், பிரிட்டனுடனான கூட்டு போர் பயிற்சியில் இந்தியாவின் நிலைப்பாடு குழப்பம் அடைந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான நிலையை அவை எடுத்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வரும் இந்தியா, இந்த விவகாரத்தில் நடுநிலைமை காக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. மேலும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்தது.

ஐநாவில் இந்தியாவின் நிலைப்பாடுக்கு உக்ரைன் அதிருப்தி தெரிவித்தது. ’உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க வேண்டுமெனில், ரஷ்யாவுக்கு எதிராக முதல் நாடாக இந்தியா எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும்’ என்று உக்ரைன் சாடியது. இந்தியாவின் நிலைப்பாடினை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய விமானப்படையின் அழிக்கப்பட்ட பதிவு

இந்த சூழலில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிட்டனுடனான கூட்டு போர் பயிற்சியில் இருந்து, இந்தியா விலகுவதாக இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பதிவு அழிக்கபட்டது. மார்ச் 6 முதல் 27 வரை வாடீங்டனில் தொடங்கும் கூட்டு விமானப் படை போர் பயிற்சியில் இந்தியாவின் 5 தேஜஸ் போர் விமானங்கள் பங்கேற்கும் என முன்னதாக இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நடப்பு சூழலை கருத்தில்கொண்டு பிரிட்டனுடனான கோப்ரா வாரியர் போர் பயிற்சியில் இந்திய போர் விமானங்கள் பங்கேற்காது என்று இந்திய விமானப் படை நேற்று(பிப்.26) அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டதால், இந்தியாவின் நிலைப்பாடு குறித்த குழப்பம் வெளிப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாம் மீது பிரிட்டன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தது. மேலும் ரஷ்ய அதிபர் புதினை ‘சர்வாதிகாரி’ என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக விமர்சித்திருந்தார். பதிலடியாக பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், ரஷ்ய வான்பரப்பில் பறப்பதற்கு ரஷ்யா தடை விதித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE