உக்ரைன் போர் உலகுக்குச் சொல்லும் பாடம் என்ன?

By வெ.சந்திரமோகன்

“ஒவ்வொரு போரின் தொடக்கமும் ஓர் இருட்டு அறையின் கதவைத் திறப்பதைப் போன்றது. இருளில் என்ன மறைந்திருக்கும் என யாருக்கும் தெரியாது” - 2-ம் உலகப்போரின் சூத்திரதாரியான ஹிட்லர் சொன்ன வார்த்தைகள் இவை. அந்த சர்வாதிகாரியின் இடத்தில் இன்று ரஷ்ய அதிபர் புதின் வந்திருக்கிறார்.

இந்த வாரமோ அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ கூட தாக்குதல் தொடங்க வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிப்ரவரி 16-ல் உத்தரவாதம் கொடுத்த ரஷ்யா, அந்த வார்த்தைகளின் ஈரம் காய்வதற்கு முன்னர், உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிவிட்டது. தனது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கொண்ட ஒரு குட்டி தேசத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது ரஷ்யா.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடொன்று எதிர்கொள்ளும் பெரும் தாக்குதல் இது. உலகம், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் யுகத்தில் நடக்கும் முதல் பெரும் போரும் இதுதான். தகவல் தொழில்நுட்பம் உள்ளங்கைகளில் தவழும் ஒரு யுகத்தில் நடக்கும் இந்த யுத்தத்தின் சாட்சியமாக, ஏராளமான காணொலிப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. ஆனாலும், புதினின் மனதில் இருக்கும் திட்டங்களைக் காட்டத்தான் ஒரு தொழில்நுட்பம் இல்லை.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் 2022 ஜனவரி 12-ல், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது...

போரின் பின்னணி

தனது தரப்பில் சில நியாயங்களைக் கட்டமைத்துத்தான் இந்தப் போரைத் தொடங்கியிருக்கிறார் புதின். முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், மேற்கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனிக்குக் கடும் நிபந்தனைகள் தரப்பட்டதுபோல, நேட்டோ படைகளின் விரிவாக்கம் தங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்யா கருதுகிறது. 1949-ல் 12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அவ்வப்போது விரிவாக்கம் செய்துவருகிறது. 1990-களின் இறுதியில் கிழக்கு நோக்கி நேட்டோவில் விரிவாக்கம் செய்ய அமெரிக்கா முடிவெடுத்தபோது, ரஷ்யா அதை ரசிக்கவில்லை.

1997-ல், ரஷ்யாவுக்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையில் ஃபவுண்டிங் ஆக்ட் எனும் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறித்தான், இந்த விரிவாக்கத்தை நேட்டோ மேற்கொண்டது. 1998-ல் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபோதே, இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது. 1999-ல் மத்திய ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகியவை நேட்டோவில் இணைக்கப்பட்டபோது ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின்னரும் பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா உள்ளிட்ட கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் சேர்க்கப்பட்டன. அந்த வரிசையில், உக்ரைனையும் நேட்டோவில் சேர்க்க முயற்சிகள் நடந்தபோது, ரஷ்யா மிகவும் கோபமடைந்தது.

2014-ல் க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற ஓர் அமைப்பில் சேர்வது பாதுகாப்பளிக்கும் என்று கருதிய உக்ரைன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 2021 ஜனவரியில்தான், நேட்டோவில் உக்ரைனைச் சேர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் அதன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

எனினும், எல்லை சார்ந்த பிரச்சினைகள் நிலவும் உக்ரைனைச் சேர்ப்பதில் நேட்டோவிடமும் பெரிய ஆர்வம் கிடையாது என்றே கருதப்படுகிறது. ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய பின்னரும் உக்ரைனுக்கு உதவிக்கு வந்துவிடவில்லை நேட்டோ. ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு எந்தப் பக்கமிருந்தும் கிடைக்கவில்லை என கனத்த மனதுடன் பதிவு செய்திருக்கிறார் ஸெலென்ஸ்கி.

ரஷ்ய அதிபர் புதின்

தார்மிக நியாயமற்ற தர்க்கங்கள்

கிழக்கு உக்ரைனில் நேட்டோ படைகளின் இருப்பு என்பது தனக்குப் பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல் என ரஷ்யா கருதுவதில்கூட, ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. ஆனால், அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு உக்ரைன் சென்றதாக ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வலுவற்றவை என்றே கருதப்படுகிறது. “ரஷ்யாவுடன் கிரைமியா இணைந்துகொண்டதை உக்ரைனில் இருக்கும் நாஜிக்களும், தேசியவாதிகளும் மன்னிக்கத் தயாராக இல்லை; அவர்களை நேட்டோ நாடுகள் ஆதரிக்கின்றன” என்று ஓலமிட்டார் புதின். “மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அணு ஆயுதங்களை வாங்கிக்குவிக்க உக்ரைன் முயற்சிக்கிறது. கிழக்கு உக்ரைனில் இன அழிப்பு நடக்கிறது” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

அவர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதே, இன்னொரு நாட்டை அச்சுறுத்தும் எனச் சொல்ல முடியாது என அணு ஆயுத அச்சுறுத்தலின் சட்டபூர்வ தன்மை குறித்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1945-ல் கையெழுத்தான ஐநா பட்டயத்தின் அடிப்படையில்தான் ஐநா உருவானது. அந்த ஒப்பந்தத்தின் சட்டக்கூறு 2(4), எந்த நாட்டின் மீதும் அச்சுறுத்தல் விடுப்பதையும் படைகளைப் பயன்படுத்துவதையும் தடை செய்கிறது. ரஷ்யா இதை மீறியிருக்கிறது. அதே சட்டக்கூறின்படி இறையாண்மை மிக்க ஒரு நாடு எந்த அமைப்புடனும் சேர்ந்துகொள்ளலாம். எனவே, எந்த வகையிலும் புதின் தனது போர் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாக்கு தவறிய அமெரிக்கா

உக்ரைன் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த அமெரிக்கா, போர் தொடங்கியதும் அந்நாட்டைக் கைவிட்டுவிட்டதாகச் சீனா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்திருக்கின்றன. உக்ரைன் விவகாரத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்கிறது சீன அரசு ஆதரவு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’.

ரஷ்யாவுடனான நேரடிப் போர் என்பது இன்னொரு உலகப் போரைத் தொடங்குவதற்குச் சமம் எனக் கருதுகிறது அமெரிக்கா. இரண்டும் உலகின் மிகப் பெரிய அணுசக்தி நாடுகள் என்பதால், அதில் ஒரு தர்க்கம் இருப்பதை மறுக்க முடியாது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவுவதிலும் அமெரிக்கா பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை என்பதே நிதர்சனம். ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கைவிட்டதாக எழுந்த சர்வதேச விமர்சனங்களின் ஈரம் காய்வதற்கு முன்னர், உக்ரைனையும் அந்நாடு கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

எந்தப் புள்ளியில் நிறுத்தும் ரஷ்யா?

புதின் மனதில் சில திட்டங்கள் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. உக்ரைனில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது, நேட்டோவில் சேரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, ரஷ்யா தலைமையில் இயங்கிவரும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த (சிஎஸ்டிஓ) அமைப்பில் சேர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றவை அவற்றில் முக்கியமானவை. மறுபுறம், ஒருவேளை ஸெலன்ஸ்கியின் அரசு வீழ்த்தப்பட்டு, ரஷ்யாவின் பொம்மை அரசு நிறுவப்பட்டாலும் நேட்டோவின் ஆதரவில் போட்டி அரசு ஒன்று உருவாக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. நேட்டோ முழு அளவில் உக்ரைனுக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் இது சாத்தியம்.

பொருளாதாரத் தடைகள்

அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி7 போன்ற கூட்டமைப்புகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கின்றன. பொருளாதாரத் தடை, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் கண்டனம் என்பதைத் தாண்டி வேறு எந்த எதிர்ப்பையும் ரஷ்யா சந்திக்கவில்லை. சொல்லப்போனால், பொருளாதாரத் தடைகளைப் புதின் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா என்றே சந்தேகம் எழுகிறது. பதிலடியாக, தனது வான் எல்லையில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளில் அவர் இறங்கிவிட்டார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு முறியடித்துவிட்டது ரஷ்யா!

ரஷ்யாவின் பெரும் தொழிலதிபர்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப்போவதில்லை. பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, சைப்ரஸ் போன்ற வெளிநாடுகளில் பெருமளவில் முதலீடு செய்திருக்கும் புதினின் தொழிலதிபர் நண்பர்கள், பொருளாதாரத் தடைகளால் பாதிப்பு நேராத வண்ணம் கவனமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 2014-ல் க்ரைமியாவை இணைத்துக்கொண்ட பின்னர், ரஷ்யா மீது கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் புதின் அரசு சமாளித்துவந்ததைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை

உலக அளவில் பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் இப்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டன. எரிவாயு, கச்சா எண்ணெய் விலை உயர்வை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேசப் பங்குச்சந்தையும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

வணிகம், கலாச்சாரம், தொழில்நுட்பம் என அனைத்து அம்சங்களிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் தங்களைப் பொருத்திக்கொள்ளவே உக்ரைன் மக்கள் விரும்புகிறார்கள். ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த உக்ரைன், கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத் தொடர்பைப் பெருமளவு வளர்த்துக்கொண்டுவிட்டது. எனவே, இந்தப் போரால் அந்த வர்த்தகம் நிலைகுலைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, ரஷ்யாவைவிடவும் உக்ரைனுடன்தான் சீனாவின் வணிகத் தொடர்புகள் அதிகம். உக்ரைனிலிருந்து பார்லி, சோளம் போன்றவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது சீனா. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சீனாவின் வணிகத் தொடர்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இப்படியான சூழலில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை நீட்டித்துக்கொண்டே செல்வது சீனாவுக்கும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

நண்பர்களை இழக்கும் ரஷ்யா

ரஷ்யாவுக்கு வேறுவிதமான பாதிப்புகளும் உண்டு. அந்நாட்டின் தொழிலதிபர்கள் செழித்து வளர்ந்திருந்தாலும், சாமானிய ரஷ்யர்கள், ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களை ஒப்பிட குறைவான வருமானம் கொண்டவர்கள்தான். உக்ரைன் மீதான இந்தப் போரின் மூலம் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனது நட்பு நாடுகளின் உறவையும் ரஷ்யா இழக்கிறது. ஹங்கேரி, செக் குடியரசு போன்ற நாடுகள் பல்லாண்டுகளாக ரஷ்யாவுடன் உறவைப் பேணிவந்தவை. குறிப்பாக, செக் குடியரசின் அதிபர் மிலோஸ் ஸெமான், ரஷ்யாவின் வேலைக்காரர் என்று அழைக்கப்படும் அளவுக்குப் புதினுக்கு விசுவாசம் காட்டியவர். போருக்குச் சில நாட்கள் முன்புவரைகூட ரஷ்யாவின் பக்கம் நின்றவர். ஆனால், போர் தொடங்கியதும், “ரஷ்யா அமைதிக்கு எதிராகக் குற்றமிழைத்துவிட்டது” என்று அவர் கண்டித்திருக்கிறார். நேட்டோவில் இதுவரை இணைந்திராத இன்னொரு நட்பு நாடான மால்டோவாவும் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறது.

கரோனா பெருந்தொற்று இன்னமும் முடிவுறாத ஒரு காலகட்டத்தில், போரில் இறங்கியிருக்கிறார் புதின். தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் என ஏதேனும் ஒருவகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே உலக நாடுகள் இருக்கின்றன. அந்தத் தொடர் சங்கிலியின் எந்தக் கண்ணியில் பிரச்சினை ஏற்பட்டாலும் அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

இந்தப் போர் உலகின் முகத்தையே மாற்றக்கூடியது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அது உண்மை என்பதைக் கூடிய விரைவில் உலகம் உணரும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE