உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 16,000 இந்தியர்கள்: எப்படி மீட்கப்போகிறது அரசு?

By காமதேனு

உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திவரும் உக்கிரத் தாக்குலுக்கு நடுவே, 16,000 இந்தியர்கள் உயிரச்சத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். பலர் தாங்கள் வசிக்கும் குடியிருப்புக் கட்டிடங்களைவிட்டு வெளியே வர அஞ்சி அங்கேயே முடங்கிக் கிடக்கின்றனர். வெடிகுண்டு தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் எனப் பலர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் ரஷ்யத் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தங்களை மீட்கக்கோரி தாய்நாட்டிடம் கோருகிறார்கள் இந்தியர்கள்.

உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த மணிஷ் ஜஸ்வால் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார். உக்ரைனில் இருக்கும் இந்தியர்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குக் காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து பேசி ‘கூ’ செயலியில் பதிவிட்டிருக்கும் காணொலியில், “நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம். காலையிலிருந்து மூன்று நான்கு குண்டுகள் வெடித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவருகின்றன. வான் வழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு நரேந்திர மோடியையும் யோகி ஆதித்யநாத்தையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் எந்த நகரத்தில் அவர் இருக்கிறார் எனும் தகவலை அந்தக் காணொலியில் அவர் சொல்லவில்லை.

மேற்கு உக்ரைனின் டெர்னோபில் நகரில் படித்துவரும் நிலேஷ் ஜெயின் எனும் மாணவர், “இணைய இணைப்பு சரியாக இல்லை. குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிகிறது. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். சீக்கிரம் எங்களை இங்கிருந்து மீட்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்” எனும் கோரிக்கையுடன் காணொலியை வெளியிட்டிருக்கிறார். மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் இருந்து அந்தக் காணொலியை அவர் பதிவுசெய்திருக்கிறார். அங்கு மக்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். 30 மணி நேரத்துக்கு மேலாக அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக நிலேஷ் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்குச் செல்ல விமான டிக்கெட் புக் செய்திருந்தவர்கள், உக்ரைன் தனது வான் வழிப்போக்குவரத்தை நிறுத்திவைத்திருப்பதால் விமானங்கள் ரத்தாகி தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள் என குஜராத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் கூறியிருக்கிறார். ஏடிஎம்கள், கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகவும் அனைவரும் பீதியடைந்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைனில் போர்ப் பதற்றம் உச்சமடைந்த நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டுக்கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி பிப்ரவரி 21-ல் ஏர் இந்தியா விமானம் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. தலைநகர் கீவிலிருந்து முதல் விமானம் 254 பயணிகளுடன் பிப்ரவரி 22 நள்ளிரவு 11.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

எனினும், போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது இந்தியர்களை மீட்பதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று இந்தியர்களை மீட்க சென்ர ஏர் இந்தியா விமானம் பாதி வழியில் திரும்பிவந்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, போலந்து வழியே இந்தியர்களை மீட்டுவருவதற்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களை அனுப்பியிருக்கிறது.

“பாதுகாப்பான வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து சாலை வழியாகச் சென்றால், 9 மணி நேரத்தில் போலந்தை அடைந்துவிடலாம். 12 மணி நேரத்தில் ருமேனியாவை அடைந்துவிடலாம்” என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லா கூறியிருக்கிறார். 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையையும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திறந்திருக்கிறது.

உக்ரைனிலிருந்து சாலை வழியாக அண்டை நாடுகளுக்கு வரும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு வழிகாட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை உக்ரைன், ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களும் வழங்கியிருக்கின்றன. அவசரகாலத்தில், குண்டுவெடிப்பிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடத்தைக் கண்டடைவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தலைநகர் கீவை நோக்கிச் செல்ல திட்டமிட்டவர்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு, திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என நேற்று இரவு ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய மோடி கூறியிருந்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதினும் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE