இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்- ரஷ்ய அதிபர் புதின்

By காமதேனு

இந்திய பிரதமர் மோடியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 2வது நாளாக தாக்குதலை தொடர்ந்துள்ளது. தரை, வான், கடல் வழியாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது. பாதுகாப்பு கருதி உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆனால், இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உக்ரைனிலேயே இருந்து வருகின்றனர். தங்கியிருக்கும் பகுதிகளில் குண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக அங்குள்ள தமிழக மாணவர்கள் கூறிவருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. நாளை இரண்டு ஏர் இந்தியா விமானங்களை மத்திய அரசு அனுப்பிவைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ருமேனியா, ஹங்கேரி எல்லை வழியாக இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்றிரவு ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது, இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதின் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தப்படி, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தற்போது அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE