உக்ரைன் போர்: மோடியின் வேண்டுகோள் செவிமடுக்கப்படுமா?

By சந்தனார்

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி நேற்று பேசியிருக்கும் நிலையில், அவரது வார்த்தைகளை ஏற்று போரிலிருந்து புதின் பின்வாங்குவாரா எனும் ஆவல் இந்தியர்களிடம், குறிப்பாக மோடி ஆதரவாளர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. வன்முறையைக் கைவிடுமாறு மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஷ்யப் படைகள் போரை நிறுத்துமா? அதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? பார்க்கலாம்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் நேற்று தொடங்கிய நிலையில், இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக இந்தியா அறிவித்தது உக்ரைனியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. “இந்த நிலைப்பாட்டில் நாங்கள் ஆழ்ந்த அதிருப்தி அடைந்திருக்கிறோம்” எனத் தனது வருத்தத்தைப் பதிவுசெய்த இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா, இந்திய மக்களின் உதவிக்காக மன்றாடுவதாகப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

“பிரதமர் நரேந்திர மோடி உலகின் சக்திவாய்ந்த, மதிப்புமிக்க தலைவர்களுள் ஒருவர். உலகின் வேறு தலைவர்களின் வார்த்தைகளுக்குப் புதின் செவிமடுப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், மோடியின் ஆகிருதியைப் பார்க்கும்போது, இவ்விஷயத்தில் அவர் வலுவான குரல் எழுப்பினால், குறைந்தபட்சம் புதின் அதுகுறித்து சிந்திப்பார் எனும் நம்பிக்கை எனக்குள் ஏற்படுகிறது” என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா

இதையடுத்து இவ்விஷயத்தில் பிரதமர் மோடி என்ன முடிவெடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர், உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் புதினுடன் மோடி பேசவிருக்கிறார் என இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹர்ஷவர்த்தன் சிரிங்க்லா நேற்று இரவு தகவல் வெளியிட்டார். அதன்படி, நேற்று இரவு புதினைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய மோடி, வன்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைப் பாதைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச அளவில் எழுந்த கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டுவரும் புதின், மோடியிடம் உக்ரைன் நிலவரம் உச்சமடைந்து வந்தது எப்படி என்பது குறித்து விளக்கினார். உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு அளித்துவரும் ஆதரவு, ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாடு கூறிவருகிறது. இந்நிலையில், புதினுடனான தொலைபேசிப் பேச்சின்போது, நேட்டோவுடனான ரஷ்யாவின் முரண்களுக்கு நேர்மையான பேச்சுவார்த்தைகளால்தான் தீர்வு காண முடியும் என மோடி வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதலில் உக்ரைன் பலியாகக் கூடாது என்பதுதான் இந்தியாவின் கருத்து. எனினும், போரை நிறுத்துவதற்கான அறிகுறி ரஷ்யாவிடம் இப்போதுவரை தென்படவில்லை. பல்முனைத் தாக்குதல்களை உக்ரைன் மீது கட்டவிழ்த்திருக்கிறது. நிலம், கடல், வானம் என எல்லா வழிகளிலும் படைகளை அனுப்பி உக்ரைனைத் தாக்கி அழித்துக்கொண்டிருக்கிறது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களைப் பத்திரமாக வெளியேற்றுவதில் இந்தியா அதிகபட்ச முன்னுரிமை காட்டுவதாகப் புதினிடம் மோடி கூறியிருக்கிறார். தற்போது வரை 4,000 சொச்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். போர்ச்சூழலில் விமானங்கள் பறக்க முடியாது என்பதால் போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா என உக்ரைனின் அண்டை நாடுகள் வழியே இந்தியர்களை மீட்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் இந்தியா செயல்பட வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கின்றன. இந்தியா நடுநிலை வகிப்பதாகக் கூறுவதன் பின்னணியில் பாதுகாப்புக் காரணிகளும், பொருளாதாரக் காரணிகளும் உள்ளன. ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதிக்கும் பொருளாதாரத் தடை இந்தியாவின் மீதும் தாக்கம் செலுத்தும் என்பது அவற்றில் முக்கியமானது. சீனாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, இந்தியா - சீனா இடையிலான பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் மென்மையான போக்கைக் கொண்டிருக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவால், அத்தனை எளிதில் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடவும் முடியாது. சீனாவும் பாகிஸ்தானும் ஏற்படுத்திவரும் சவால்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எஸ்-400 ரக விமானங்களை இந்தியா சார்ந்திருக்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் ராணுவத் தளவாடங்களில் ஏறத்தாழ 60 முதல் 70 சதவீதம் வரை ரஷ்யத் தயாரிப்புகள்தான்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குச் சீனா முழு ஆதரவு தருகிறது. மேற்கத்திய நாடுகள் தரும் நெருக்கடியால் சீனாவின் பக்கமே ரஷ்யா முழுமையாகச் சாய்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, 2014-ல் உக்ரைனின் க்ரைமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தபோது மேற்கத்திய நாடுகள் தந்த நெருக்கடியால் சீனாவுடன் முன்பைவிட அதிகமாக நெருக்கம் காட்டத் தொடங்கியது ரஷ்யா.

மறுபுறம், சீனா தரும் நெருக்கடிகளைச் சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பெரிதும் சார்ந்திருக்கிறது. இன்னொரு புறம், சீனாவுடனான முரண்களைத் தீர்க்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யாவை ஒரு மையமாக இந்தியா பயன்படுத்துகிறது. கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்திய – சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களும், பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் ரஷ்யாவில்தான் சந்தித்துப் பேசிவருகின்றனர். ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஷ்யாவின் துணை இந்தியாவுக்கு அவசியமாக இருந்தது.

இன்றைக்கு ரஷ்யா இருக்கும் மூர்க்க நிலையில் அதைத் தடுக்க, ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க அமெரிக்காவே தயக்கம் காட்டுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, சீனா எனும் ஒற்றைப் புள்ளியைச் சார்ந்து கவனமாகக் காய்நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

எனவே, மோடி ஆதரவாளர்கள் நினைப்பதுபோல ரஷ்யாவுக்கு அழுத்தம் தந்து போரை நிறுத்தும் நிலையில் இந்தியா இல்லை என்பதே நிதர்சனம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE