137 மாவீரர்களை இழந்துள்ளோம்: உக்ரைன் அதிபர் உருக்கம்

By காமதேனு

உக்ரைனைச் சேர்ந்த 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், முதல் நாளில் போரில் 137 மாவீரர்களை இழந்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில், தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, திடீரென உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்த எதிர்ப்பையும் மீறி நேற்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

ராணுவ தளங்கள், விமான தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை குறி வைத்து ரஷ்யா படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனர். குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். காணொலியில் பேசிய அவர், “ரஷ்யப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் ராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைன் நாட்டிலிருந்து 18-60 வயதுடையோர் வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்கி துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாகவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள், 11 விமான நிலையங்கள் உட்பட 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு முதல்நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE