மரபான போர் நடவடிக்கைகளுக்கு முன்பே உக்ரைன் மீதான சைபர் தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. மேலும், ரஷ்யாவின் இந்த சைபர் தாக்குதல், தற்போதைய ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு வேகம் கண்டுள்ளது.
நவீன போர் நடைமுறைகள் வெகுவாக மாறி வருகின்றன. ஏவுகணைகள் வீசி உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் விமான நிலையங்களை தகர்த்த பிறகே, பாராசூட் மூலம் உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய வீரர்கள் குதித்து வருகின்றனர். ஆனால் இவை அனைத்துக்கும் முன்பாக, உக்ரைன் மீதான சைபர் போர் நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கி இருந்தது.
வட கொரியாவைப் போன்றே ரஷ்யாவின் சைபர் ஊடுருவல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அமெரிக்கா மட்டுமன்றி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் ரஷ்யாவின் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாய் குற்றம்சாட்டி உள்ளன.
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தடிக்கும்போதெல்லாம், அந்நாட்டின் சைபர் கட்டமைப்பை ரஷ்யா பலமாகத் தாக்கும். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில், இம்மாதிரி உக்ரைனின் மின்சார உற்பத்தி மையங்களின் கணினி வலைப்பின்னல் தாக்குதலுக்கு ஆளானபோது நாடே இருளில் மூழ்கி இருக்கிறது. அதன் பிறகும் அவ்வப்போது உக்ரைன் அரசியல்வாதிகள் முதல் பாதுகாப்பு கட்டமைப்புகள் வரை ரஷ்ய ஹேக்கர் ஊடுருவி சித்து விளையாட்டு காண்பிப்பார்கள். இவற்றால் உக்ரைன் பெரும் பொருளாதார இழப்புக்கும் ஆளாகி இருக்கிறது.
தனது வழிக்கு உடன்படாத தேசத்தை மிரட்டும் நோக்கில், இது போன்ற சைபர் தாக்குதல்களை நிகழ்த்தி அதன் உறுதியை குலைப்பது எதிரி தேசத்தின் போர்க்கலைகளில் ஒன்றாக சைபர் தாக்குதல் தற்போது உருவெடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு பிறந்தது முதலே இந்த சைபர் தாக்குதலில் தீவிரம் செலுத்திய ரஷ்யா, கடந்த சில தினங்களாக அவற்றில் உக்கிரம் காட்டியது. இதனை மோப்பமிட்டே, உக்ரைன் மீது ரஷ்யா பகிரங்க தாக்குதலுக்கு தயாராகி விட்டது என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்து வந்தன. நேற்று முதல் வங்கிகளின் மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல், இன்று போர் மூண்ட சூழலில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களை அலைய விட்டுள்ளன. மேலும் உக்ரைனின் ராணுவ மையங்கள், இணைய முனையங்கள் ஆகியவற்றையும் ரஷ்ய ஹேக்கர்கள் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
நவீன யுத்த நடைமுறைகளில் இனி சைபர் தாக்குதல் முக்கிய இடம் பிடிக்கும். அதற்கு உதாரணமாகி இருக்கிறது, ரஷ்யாவின் சகல தாக்குதல்களிலும் சிக்கியிருக்கும் உக்ரைன்.