உக்ரைனைத் தாக்கும் ரஷ்யா: உலகம் என்ன செய்யப்போகிறது?

By சந்தனார்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ரஷ்யப் போர் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் சுட்டுவீழ்த்தி பதிலடி கொடுத்துவருகிறது உக்ரைன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போரின் விளைவுகள் எப்படி இருக்கும், அழிவுகளைத் தடுக்க உலகம் என்ன செய்யப்போகிறது எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்துவந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 20-ல் நிறைவடைந்தன. அதற்கு முன்னதாக ஊடுருவல் நிகழலாம் என ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருந்தார். அதேவேளையில், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தாத வகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்னரே உக்ரைன் மீது புதின் தாக்குதல் தொடுப்பார் எனக் கணிக்கப்பட்டது. அதன்படியே ஒலிம்பிக் முடிந்த கையோடு உக்ரைனில் ஊடுருவல் நிகழ்த்தியிருக்கிறது ரஷ்யா.

இடையில் உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யா போக்குக் காட்டியதை அமெரிக்கா சரியாகக் கணித்து, தாக்குதலில் ரஷ்யா இறங்கும் என உறுதியாகத் தெரிவித்தது. அமெரிக்காவின் கணிப்பு பலித்துவிட்டது.

2014-ல் க்ரைமியாவை ஆக்கிரமிக்க உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடக்கும் பெரிய தாக்குதல் இது.

2014-ல் நடந்தது என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க மறுத்து ரஷ்யாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக, உக்ரைனின் அப்போதைய அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. போராட்டங்களை நசுக்க முயன்ற யானுகோவிச், போராட்டக்கார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். 100-க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரும் போராட்டம் உக்கிரமடைந்ததால், பதவியை உதறிவிட்டு ரஷ்யாவுக்குத் தப்பி ஓடினார். இதற்கிடையே, உக்ரைனில் ரஷ்யக் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் க்ரைமியாவை ஊடுருவி அந்தப் பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் புதின். அந்தப் போரில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவுக்கு என்ன எதிர்வினை?

உண்மையில், ரஷ்யாவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரிட்டன் அறிவித்திருக்கிறது. எனினும், சர்வதேச நாடுகளின் சார்பில் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கைக்கெல்லாம் வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட படைகளை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா முன்பே சொல்லியிருந்தது. நேட்டோ நாடுகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே படைகளை அனுப்ப முன்வந்தது. உக்ரைன் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க அங்கு சொற்ப எண்ணிக்கையில் தங்கியிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரை மீட்கக்கூட அமெரிக்கா முன்வரவில்லை. அப்படிச் செய்வது பிரச்சினையை ஏற்படுத்தும் என விளக்கம் வேறு சொன்னது. அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது உலகப்போர் தொடங்குவதற்கு நிகரானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

ராணுவ ரீதியிலான அழுத்தத்தைவிடவும் பொருளாதார ரீதியிலான அழுத்தம்தான் ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவரும் என்றே கருதப்படுகிறது. 2014-ல் நடந்த க்ரைமிய ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் பொருளாதாரத் தடைதான் ரஷ்யாவைக் கட்டுப்பட வைத்தது. முன்னதாக, 2008-ல் ஜார்ஜியாவுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவி அந்நாட்டின் பிரிவினைவாதக் குழுக்களின் கரத்தை ஓங்கச் செய்தபோதும், பொருளாதாரத் தடை எனும் அஸ்திரம்தான் ரஷ்யாவைப் பின்வாங்க வைத்தது.

உக்ரைனில் பதற்றத்தைத் தவிர்க்க கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ‘நார்மண்டி ஃபோர்’ என்று அழைக்கப்படுகின்றன. பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் 2015-ல் ஓர் முக்கிய உடன்படிக்கையை இந்நாடுகள் இணைந்து கொண்டுவந்தன. உக்ரைனில், டோன்பாஸ் என்று மொத்தமாக அழைக்கப்படும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்கள் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கிவந்தன (அந்தப் பிராந்தியங்களின் சுதந்திரத்தை பிப்ரவரி 21-ல் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அங்கீகரித்திருக்கிறார்). அந்தப் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையில் 2014-ல் நடந்த யுத்தத்துக்குப் பின்னர் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது பெயரளவுக்கு மட்டுமே இருந்துவந்தது.

இந்தப் பகுதிகளை மீட்டெடுக்கும் முனைப்பில் உக்ரைன் இருந்த நிலையில், அவற்றின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாகப் புதின் அறிவித்துவிட்டார். எரிபொருள் இறக்குமதிக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பதால், அதிகக் கண்டிப்பு காட்டாமல் பொறுமை காப்பதாக ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனங்கள் உண்டு. எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தலாம் என்பதால், அந்நாடுகளின் அணுமுறை மாறியிருக்கிறது. தற்போது நடக்கும் இந்தப் போருக்கு ரஷ்யாதான் பொறுப்பு எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அந்நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த பொருளாதாரத் தடைகளும் அமலுக்கு வந்துவிட்டன. ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜீ ஷோய்கு, ராணுவத் தளபதிகள், ரஷ்ய அரசின் ஆதரவில் இயங்கிவரும் ஆங்கிலத் தொலைக்காட்சியான ஆர்டி சேனலின் முதன்மை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

ரஷ்யாவின் இறையாண்மைக் கடன்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது. ஒரு நாட்டின் திட்டங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடுகளிலிருந்து அந்நாட்டு அரசு வாங்கும் கடன்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் போடும் முதலீடுகள் போன்ற இறையாண்மைக் கடன்கள் எனும் வகைமைக்குள் அடங்கும். ரஷ்யாவின் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ எனும் எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதை நிறுத்திவைத்திருக்கிறது ஜெர்மனி. ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன.

இதற்கு முன்பு ரஷ்யா நடத்திய தாக்குதல்கள், ஊடுருவல்களின்போது அவற்றை முழு அளவில் நடத்துவதைத் தவிர்த்திருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. தங்கள் தரப்பில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் தவிர்க்க, ஒரு கட்டத்தில் தாக்குதலை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்குவது ரஷ்யாவின் பாணி.

இந்த முறையும் அதிக உயிரிழப்புகளையும், பொருளாதாரச் சரிவையும் தவிர்க்க ரஷ்யா முன்வருமா, அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்த சர்வதேச சக்திகளின் அழுத்தம் வழிவகுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE