உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இன்று காலை அங்கு விரைந்த ஏர் இந்தியா விமானம், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பாதியில் திரும்பியது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் பரிதவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஒருமாத காலமாகவே உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருக்கும் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலில் இறங்கலாம் என அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் எச்சரித்து வருகின்றன. அதற்கேற்ப தங்களது குடிமக்களை உக்ரைனில் இருந்து தாயகம் திரும்புமாறு அந்த நாடுகள் அறிவுறுத்தின. ஆனால் இந்தியா வெகு தாமதமாகவே எதிர்வினையாற்றியது. அதிலும் ’விரும்புவோர் இந்தியா திரும்பலாம்’ என்றே அறிவித்திருந்தது.
ரஷ்ய தரப்பில் போருக்கான ஆயத்தங்கள் தீவிரமானதை அடுத்து பிப்.22, 24, 26 ஆகிய தேதிகளில், வந்தே பாரத் விமான சேவையின் கீழ், ஏர் இந்தியா விமானங்கள் உக்ரைன் மாணவர்களை மீட்டு வரும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி முதல் விமானம் பிப்.22 அன்று உக்ரைன் கிளம்பி, அன்று இரவு இந்திய குடிமக்களுடன் டெல்லி திரும்பியது.
இரண்டாவது விமானம் இன்று(பிப்.24) காலை கிளம்பி உக்ரைன் விரைந்தது. ஆனால் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் வான் எல்லை மூடப்படுவதாக உக்ரைன் அறிவித்ததால் பாதியில் திரும்பியது. மேலும் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் ராணுவத் தளங்களுக்கு அடுத்தபடியாக விமான நிலையங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் இனிவரும் நாட்களிலும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் சவால்கள் எழுந்துள்ளன.
உக்ரைனில் மருத்துவக் கல்வியின் தரம் காரணமாகவும், இந்தியாவைவிட அங்கே உயர்கல்விச் செலவு குறைவு என்பதாலும், இங்கிருந்து அதிக எண்ணிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்காக மாணவர்கள் சென்றுள்ளனர். ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் இவர்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக இந்த மாணவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பான மீட்பு நடவடிக்கையை வலியுறுத்தி அவர்களின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.