ரஷ்யா தாக்குதல்: தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை வாங்கும் உக்ரைன் மக்கள்!

By காமதேனு

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கியிருக்கிறது. முன்னதாக ரஷ்யாவை எதிர்கொள்ள தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை வாங்க ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் உக்ரைன் குடிமக்கள் குவிந்தது கவனம் ஈர்க்கிறது.

ரஷ்யாவின் தாக்குதலிலிருந்து உக்ரைனைத் தற்காத்துக்கொள்வோம் என உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி சூளுரைத்திருக்கிறார். அங்கு நெருக்கடி நிலை அமலாகும் சூழலும் உருவாகியிருக்கிறது. மக்கள் கூட்டமாகக் கூடுவது, அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் உக்ரைன் தீவிரம் காட்டுகிறது.

இதற்கிடையே, குடிமக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பு, ஆயுதங்களை வீட்டிலிருந்து வெளியில் எடுத்துவருவது தடை செய்யப்பட்டிருந்தது.

உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி

2014-ல் க்ரைமியாவை ஆக்கிரமிக்க ரஷ்யா நடத்திய தாக்குதல், கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதல் போன்றவற்றின் விளைவாக முன்பைவிட அதிகமாகப் பாதுகாப்பு விழிப்புணர்வைப் பெற்றிருக்கும் உக்ரைன் மக்கள், தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இன்றைய தேதியில், உக்ரைன் மக்கள்தொகையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் போர் அனுபவம் இருக்கிறது.

பள்ளிகளிலேயே பயிற்சி

உக்ரைனில் பொதுவாகப் பள்ளிகளிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனால், ஆண்களும், பெண்களும் இளம் வயதிலேயே துப்பாக்கியைக் கையாளக் கற்றுக்கொள்கின்றனர். வீடுகளிலேயே துப்பாக்கிகளை வாங்கிக் குவிக்கும் பழக்கம் கொண்ட உக்ரைனியர்கள், தங்கள் குழந்தைகளுக்கும் துப்பாக்கிகளைப் பரிசளிப்பதுண்டு.

ரஷ்யா தாக்குதல் நடத்துவது உறுதி என்ற தகவல் வெளியானதுமே, ஆயுதங்களை வாங்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டினர். துப்பாக்கி விற்பனைக் கடைகளில் ஏ.ஆர்-10, ஏ.ஆர்-15 போன்ற துப்பாக்கி ரகங்கள் விற்றுத்தீர்ந்தன. பள்ளிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்தவர்கள் தவிர, மற்றவர்களும் கடந்த சில மாதங்களாகத் துப்பாக்கிப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு போரில் பங்கேற்று, பின்னர் வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கும் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி ரஷ்யாவில் இருக்கும் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறும் கேட்டுகொண்டிருக்கிறார். ஏற்கெனவே போரில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்களுக்கு உக்ரைன் ராணுவமும் துப்பாக்கிகளை வழங்கியிருக்கிறது. எனினும், அந்தப் பணிகள் தாமதமாவதால், ஆயுதக் கடைகளில் பலரும் துப்பாக்கிகளை வாங்கிவருகிறார்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்கிய ஆயுதங்கள் தங்களுக்குக் கைகொடுக்கும் என்றும், 2014-ம் ஆண்டு போல் அல்லாமல், இந்த முறை ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுப்போம் என்றும் உக்ரைனியர்கள் கூறியிருக்கிறார்கள்.

பிப்ரவரியில் மட்டும், 10,000 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க மக்கள் பதிவுசெய்திருக்கின்றனர். 7 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE