போர் தொடங்கியது: உக்ரைனில் ஊடுருவியது ரஷ்ய ராணுவம்!

By காமதேனு

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.ரஷ்யாவின் உக்ரைன் போர் தொடுப்பை அடுத்து, அவசர நடவடிக்கையாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக கூடியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம், அமெரிக்காவின் மிரட்டல், ஐநா அமைப்பின் அறிவுறுத்தல் ஆகியவற்றை மீறி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அண்டை தேசமான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தொடுப்பு உறுதியாகி உள்ளது.

முன்னாள் சோவியத் தேசமான உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் அங்கமாக மாற விழைந்ததை அடுத்து, ரஷ்யாவின் விரோதத்தை சம்பாதித்தது. நேட்டோ கூட்டமைப்பில் சேரும் உக்ரைனின் முன்னெடுப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை, தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் ரஷ்யா கருதுகிறது. உக்ரைனின் ஆட்சியாளர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் முதலாளித்துவம், பொதுவுடைமை என இரண்டாக பிரிந்து கிடப்பதும் பிரச்சினையை அதிகரித்தது.

ஒன்றரை லட்சம் துருப்புகளுடன் உக்ரைனை முற்றுகையிட்ட ரஷ்யா, போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. தனது ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருக்கும் கிழக்கு உக்ரைனின் 2 பிராந்தியங்கள் ’சுதந்திரம்’ பெற்றவையாக பிரகடனம் செய்தது. மேலும் அப்பகுதியின் பாதுகாப்புக்காக ரஷ்யாவின் அமைதிப்படையை அனுப்பவும் முடிவு செய்தது. கடைசியாக, உக்ரைனில் இருக்கும் ரஷ்யா தூதரக அதிகாரிகள் நேற்று வெளியேறியதை அடுத்து அதிகாரபூர்வ போர் நடவடிக்கையை புடின் அறிவித்துள்ளார்.

முன்னதாக போர் நடவடிக்கையை நிறுத்துமாறு ஐ.நா அமைப்பு வழங்கிய அறிவுரையை ரஷ்யா அதிபர் புதின் நிராகரித்தார். உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை தவிர்த்துவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் தலை நகர் கியேவை குறிவைத்து ரஷ்ய துருப்புகள் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE