உக்ரைனின் ராணுவத் தொழில்நுட்பத்தைக் கைப்பற்ற முயல்கிறதா சீனா?

By ஆர்.என்.சர்மா


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கத் துடிக்கிறதோ இல்லையோ, உக்ரைனின் ராணுவ சாதன தொழிற்சாலைகளில் ஊடுருவ அல்லது அவற்றின் தயாரிப்பு ரகசியங்களைத் தெரிந்துகொள்ள சீனா விரும்புகிறது மட்டும் ஊர்ஜிதமான உண்மை என்கிறார்கள். இதற்குக் காரணம் உக்ரைனில் உள்ள டேங்க் தயாரிப்புத் தொழிற்சாலையும் இன்ஜின் தயாரிப்பு ஆலைகளும் சர்வதேச சந்தையைப் பிடித்துள்ளன. பாகிஸ்தானுடன் தோழமை பாராட்டும் சீனாவே உக்ரைனிலிருந்துதான் பாகிஸ்தானுக்கு இன்ஜின்களைத் தருவித்துக் கொடுக்கிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சேர்க்க ரஷ்யா ஆட்சேபம் தெரிவிக்க முக்கிய காரணம் நேட்டோ வலுவடைந்துவிடும் என்பதுடன் ராணுவ வாகன, சாதன தயாரிப்பு ஆலைகள் நேட்டோவுக்குக் கிடைத்துவிட்டால் மேற்கத்திய நாடுகளின் ராணுவ பலம் கூடிவிடும் என்பதும்தான். அத்துடன் ரஷ்யாவுக்கு அது நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும். உக்ரைனை எப்போதும் மிரட்டியே வைத்திருக்கத்தான் உக்ரைனில் ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ‘தன்னாட்சிப் பகுதிகளாக’ ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இப்போது அங்குள்ள ரஷ்யர்களைக் காக்குமாறு துருப்புகளை ஊடுருவச் செய்கிறது.

ரஷ்யாவுக்கு உற்ற தோழனாக இருக்கும் சீனாவுக்கும் உக்ரைனை நேட்டோவிடம் இழக்க விருப்பம் இல்லை. அதை நேரடியாக அதனால் சொல்ல முடியாது. எனவேதான் ரஷ்யாவின் வீம்புக்கு அது துணை நிற்கிறது. இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே தனது போட்டி நாடுகளின் ராணுவ ஆலைகளை சீனா உளவு பார்த்து தகவல்களைத் திரட்டுகிறது. இந்தத் தகவல்களைத் திரட்டுவதில் சீனா தனி பாணியைக் கடைப்பிடிக்கிறது. அதற்கு ‘ஆயிரம் மணல் துகள்கள் உத்தி’ என்று பெயர். தொழில்முறையிலான உளவாளிகளைப் பயன்படுத்தினால் எதிரி எளிதில் கண்டுபிடித்துவிடுவார் என்பதால் உளவுத் தொழிலையே சாராத, சாதாரண சீனர்கள் மூலம் வேண்டிய தகவல்களைப் பெறுகிறது சீனா. வெளிநாடுகளில் பயிலும் சீன மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் சீனப் பேராசிரியர்கள், சுற்றுலாப் பயணிகளாகச் செல்கிறவர்கள், சீன நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணி புரிகிறவர்கள் ஆகியோரைச் அந்நாடு பயன்படுத்துகிறது. தொழில்முறை உளவாளி ஓரிடத்துக்குப் போனால், அவரைப் போன்ற எதிரி நாட்டு உளவாளி அவரை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார். இதுதான் பாம்பறியும் பாம்பின் கால்!

எனவே மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், நிறுவன ஊழியர்கள், பேராசிரியர்கள், தனியாகத் தொழில் செய்கிறவர்கள் ஆகியோரை சீன உளவு அமைப்பு தொடர்புகொண்டு இன்ன தகவல், இன்ன புகைப்படம், இன்ன ஆவணத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் எடுத்துத் தருமாறு கேட்டுக்கொள்ளும். அந்த வேலை முடிந்த பிறகு அவருடன் சீன உளவு நிறுவனம் எந்த வகையிலும் மேற்கொண்டு தொடர்புகொள்ளாது. இப்படித் திருடுவது சமயத்தில் தொழில்நுட்பங்களாகவும் இருப்பதுதான் சீனாவின் சிறப்பு. ஆம், திரைகடல் ஓடியும் தொழில்நுட்பங்களைத் திருடித்தான் பல தொழில்களைச் செழிப்புடன் வளர்த்து வருகிறது என்று சிலர் கருதுகின்றனர். இது திருட்டா அல்லது ‘போலச் செய்தலா’ என்பது விவாதத்துக்குரியது. உக்ரைன் ஏன் ரஷ்யாவுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைனில் உள்ள ராணுவத் தொழிற்சாலைகள் கனரக டாங்கு வாகனங்களில் எல்லாவித பருவச் சூழ்நிலைகளிலும் இயங்கவல்ல ஆற்றல் மிக்கவை. அதில் பயன்படுத்தப்படும் உலோகக் கலப்பு, கடைசல் வேலைகள், சீராக இயங்க அதில் பொருத்தப்படும் சாதனங்கள், குண்டுகள் போன்றவற்றை டாங்கில் வைக்கவும் தேவைக்கேற்ப சுடவும் அதில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போன்றவற்றை சீனா நோட்டம் பார்த்தே நிபுணத்துவம் பெற்றுள்ளது. உக்ரைனில் தயாராகிய இன்ஜினை மட்டுமல்ல, அதைப் போன்ற இன்ஜினையே தயாரித்தும் பாகிஸ்தானுக்கு கொடுத்திருக்கிறது சீனா. எனவே உலக நாடுகள் உக்ரைனில் நுழைய வேண்டாம் என்று ரஷ்யாவை வேண்டிக் கொண்டாலும், அப்படியொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறது சீனா என்கிறார்கள் சர்வதேச ராணுவ நிபுணர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE