போருக்கு வித்திடும் புதினின் புதிய பிரகடனம்!

By காமதேனு

கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர் வசமிருக்கும் 2 பிராந்தியங்களை சுதந்திரம் பெற்றவை என அறிவித்திருக்கும் ரஷ்ய அதிபர் புதின், அங்கு அமைதியை நிலைநாட்ட ரஷ்ய துருப்புகளை அனுப்ப உள்ளார். இந்த நடவடிக்கைகள் பெரும் போருக்கு வித்திடும் என ஐரோப்பிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற கணிப்புகள் வெளியாகி வந்த சூழலில், ரஷ்யாவின் போர் வியூகம் எங்கே தொடங்கப்போகிறது என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. உக்ரைன் தேசத்தில், தங்கள் ஆதரவு கிளர்ச்சியாளர் வசமிருக்கும் 2 பிராந்தியங்களை சுதந்திரம் பெற்றவை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் அந்த பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் அமைதி நிலை நாட்டலுக்கு தனது துருப்புகளை அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய தேசமாகும் முனைப்பில் உள்ள உக்ரைனில், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை வசப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் வாழும் மக்களும் ரஷ்ய ஆதரவுநிலை எடுத்திருப்பதாக சொல்லப்படுவதாலும், அவர்கள் மத்தியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தென்படுவதாலும், அவ்வப்போது உக்ரைன் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

தங்கள் ஆதரவு பெற்ற கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர் பிராந்தியங்களை சுதந்திரம் பெற்றவை என ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்த போக்கு உக்ரைன் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது என்று மேற்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத புதின், கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர் பிராந்தியங்களுக்கு ரஷ்ய படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

அப்படி ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லைக்குள் செல்லும்போது, கிளர்ச்சியாளர் - உக்ரைன் பாதுகாப்பு படை இடையே இதுவரை இருந்த மோதல் இனி, உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதலாக மாறும். இதுவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த்தொடுப்பாக உருவெடுக்கும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் புதிய நகர்வை அடுத்து, அவை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று(பிப்.22) கூடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE