பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை, வீடில்லாதவர்களுக்கு சுரங்கப் பாதைகளும் இல்லை என்று நினைத்துவிட்டார் போலும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ். அந்நகரத்தின் சுரங்கப் பாதைகளில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என அவர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்தைக் கிளப்பியிருக்கிறது.
நியூயார்க் நகரில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என்றால் வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லாத வறியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட குபேர பட்டணத்தில் ஏழைகளுக்குப் போக்கிடம் ஏது? இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சம் இருப்பதாலும் மக்கள் நடமாட்டம் தொடர்வதாலும், வீடற்ற ஏழைகள் அங்கேயே ஓரமாகப் படுத்து உறங்குகின்றனர். சிலர் அருகில் கழிப்பறைகள் இல்லாததால் அவசரத்துக்கு அங்கேயே சிறுநீர் கழிக்கின்றனர், எச்சில் துப்புகின்றனர். அவர்களை அங்கிருந்து போகுமாறு கூறினால் அவர்கள் தாக்க வருகிறார்கள் எனப் பலர் நகர மேயரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரைப் போல சுரங்கப் பாதைகளை இரவு 10 மணிக்குப் பிறகு கதவைச் சார்த்திப் பூட்டும் வழக்கமெல்லாம் நியூயார்க்கில் கிடையாது. சில வேளைகளில் சமூக விரோதிகள் சுரங்கப் பாதையில் காத்திருந்து அப்பாவிகளைக் கத்தியை அல்லது துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதும், அடித்து உதைப்பதும் வழக்கம். இவற்றைக் காவல்துறையினர் ரோந்துப் பணிகளின்போது கண்காணிப்பார்கள். ஆனால் சுரங்கப் பாதைகளில் தங்குகிறவர்களைத் தடுக்கவோ, வெளியேற்றவோ அவர்களுக்கு அதிகாரம் இருந்ததில்லை. இப்போது முதல் முறையாக மாநகர மேயர் இதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் ஏழைகளால் இனி அங்கே இரவு முழுவதும் தங்க முடியாது.
நகர மேயரின் இந்தச் செயலை எதிர்ப்பவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். வீடில்லாத ஏழைகள் சுரங்கப் பாதைகளில் ஏன் தங்குகிறார்கள் என்றால் இரவு முழுக்க பாதுகாப்பாகத் தங்க அவர்களுக்கென்று தனி இல்லம் எதுவும் அரசால் கட்டப்படவில்லை. வீதிகளிலோ, பூங்காக்களிலோ தங்குவது அவர்களுடைய பாதுகாப்புக்கு நல்லதல்ல. அங்குள்ள காவலர்களும் காவல் துறையிடம் புகார் செய்து அவர்களை அகற்றச் சொல்வார்கள். மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்படும் சுரங்கப் பாதைகள் பொது இடம் என்பதாலும் மழை, குளிர் இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வசதியான இடம் என்பதாலும் தங்குகின்றனர்.
அவர்களுடைய வறுமையின் பின்னணியை ஆராய்ந்து அதைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்தாலே யாரும் சுரங்கப் பாதையில் சென்று இரவில் தங்க வேண்டிய அவசியம் கிடையாது என்கின்றனர். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் மக்கள் நல திட்டங்களை இந்த அளவுக்குச் சிந்தித்து நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு மனம் கிடையாது. எனவே இது பெரிய பிரச்சினையாகவே வாய்ப்புகள் அதிகம். உலகின் பணக்கார நாடான மிகப் பெரிய பொருளாதார வல்லரசுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை இந்த ஒரு நிகழ்வு நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நகர்ப்புறங்களில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருவதையும் இந்தத் தடை மறைமுகமாகப் பதிவு செய்கிறது.