உக்ரைன் விவகாரம்... புதினுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பைடன்: ஒரே ஒரு நிபந்தனை!

By காமதேனு

உக்ரைன் எல்லையில் ஒன்றரை லட்சம் வீரர்களுடன், அந்நாட்டில் ஊடுருவக் காத்திருக்கும் ரஷ்ய ராணுவத்தால் ஐரோப்பாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் வியூகரீதியிலான ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசனை நடத்தும் யோசனையை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முன்வைத்திருக்கிறார். அதன்படி, வியாழக்கிழமை (பிப்.24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஒப்புக்கொண்டிருப்பது, கடந்த சில நாட்களாக அதிகரித்துவரும் பதற்றத்தைத் தணிக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் மாளிகையான எலிஸீ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜோ பைடன் மற்றும் புதினுடன் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இதுகுறித்துப் பேசியிருப்பதாகவும், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுடனும் பேசி இந்தப் பேச்சுவார்த்தை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜீ லாரோவும் வியாழக்கிழமை சந்திப்பின்போது பேசி, இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் குறித்து முடிவு செய்வார்கள் என்றும் பிரெஞ்சு அதிபர் மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமானால், உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுவக்கூடாது எனும் முக்கிய நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனையை ரஷ்யா ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேச அதிபர் பைடன் ஒப்புக்கொண்டிருக்கிறார், ஊடுருவல் நடக்காதபட்சத்தில்” என்று கூறப்பட்டிருக்கிறது. “ரஷ்யா போரைத் தேர்ந்தெடுத்தால், அதன் மீது உடனடியாகத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போதைய சூழலில், உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலுக்கான பணிகளை ரஷ்யா தொடர்ந்து மேற்கொள்வதாகவே தெரிகிறது” என்றும் ஜென் ஸாக்கி அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE