ஈரானுடனான அணு ஒப்பந்தம் பலவீனமானதாக இருக்கும்: இஸ்ரேல் கருத்து

By காமதேனு

அணு சக்தி நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் தருணம் நெருங்கிவரும் நிலையில் புதிய ஒப்பந்தம் குறுகிய காலத்துக்கானதாக இருக்கும் என்றும், 2015-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட பலவீனமானதாக இருக்கும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் கூறியிருக்கிறார்.

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் அணு ஒப்பந்தம் 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்று ஈரான் ஒப்புக்கொண்டது. 2016-ல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஒபாமா காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 2018-ல் வெளியேறியது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான், விரிவான கூட்டு செயல் திட்டத்தை (ஜேசிபிஓஏ) மீறி அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில், ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. 2021 ஏப்ரல் மாதம் முதல் இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது வியன்னாவில் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நஃப்தாலி பென்னெட், “விரைவில் ஓர் ஒப்பந்தத்தைப் பார்ப்போம். புதிய ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தத்தைவிட குறுகியகாலத்துக்கானதாகவும், பலவீனமானதாகவும் இருக்கும்” என்றார்.

2015 அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து ஈரானை மீட்டெடுத்தன. இந்த முறை கையெழுத்தாகும் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படவிருக்கின்றன. விரிவான கூட்டு செயல் திட்டத்தை இஸ்ரேல் எதிர்த்துவருகிறது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பின்னர், அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈரான் ஈடுபடும் என்றும் நஃப்தாலி பென்னெட் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE