ரஷ்யாவின் அதிரடி ஏவுகணை சோதனை: நாளை போர் தொடக்கமா?

By காமதேனு

உக்ரைன் மீதான தாக்குதல் நாளை தொடங்கலாம் என்ற கணிப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று(பிப்.19) ரஷ்யா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அதிரடியாக மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலில், ரஷ்யா தனது ஏவுகணை ரகங்களை ஏவி இன்று சோதனை மேற்கொண்டது. இவற்றில் ஹைப்பர்சானிக், க்ரூஸ் ரக ஏவுகணைகளுடன், அணு ஆயுதம் தாங்கும் வல்லமை படைத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும்.

இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள தகவலில், ‘தேசத்தின் பாதுகாப்பின் பொருட்டு நவீன ஆயுதங்களின் தரம் மற்றும் துல்லியத்தை பரிசோதிக்கும் வகையில் இந்த சோதனைகள் நடைபெற்றன. எதிர்பார்த்தது போலவே இந்த ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கின. தொடர்ந்து நடைபெற்று வரும் போர்ப்பயிற்சிகளின் அங்கமாக இந்த ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ’அதிபர் புதினின் பார்வையில் கீழே ஏவுகணை சோதனைகள் நடைபெற்றதாகவும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அதிபர் கண்காணித்து வந்ததாகவும்’ ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை நிறைவடைய உள்ள சூழலில், ரஷ்யாவின் இந்த ஏவுகணை பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவில் ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் முடியும் வரை, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ளாது என்று முன்னதாக கணிப்புகள் வெளியாகி இருந்தன. அவற்றை உறுதிபடுத்துவதுபோல, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் நிலையில் தனது போர்ப்பயிற்சிகளை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் இந்த போக்கு உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE