நேருவைப் புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர்: நெகிழ்ச்சியில் காங்கிரஸ்காரர்கள்!

By காமதேனு

ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் லீ ஸியென் லூங், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றிப் பெருமையுடன் பேசியிருக்கிறார்.

தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பி ரேஸியா கான் தவறான தகவல்களைக் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. அதில் பேசிய பிரதமர் லீ, “உயர்ந்த லட்சியம் மற்றும் உன்னத விழுமியங்களின் அடிப்படையில் பல நாடுகள் நிறுவப்பட்டு, இயங்கத் தொடங்கின. ஆனால், நாட்டின் நிறுவனத் தலைவர்களைத் தாண்டி, பல தசாப்தங்கள், தலைமுறைகள் தாண்டி படிப்படியாக மாற்றங்கள் நடக்கின்றன” என்று கூறினார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியென் லூங்

“உணர்ச்சி மிகுந்த நிலையில் விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன. சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்கள், பெரும் துணிச்சல், மகத்தான கலாச்சாரம், மிகச் சிறந்த திறன் கொண்ட விதிவிலக்கான தனிநபர்கள். நெருப்பின் சிலுவையைத் தாண்டி, மக்களின், தேசங்களின் தலைவர்களாக ஆனவர்கள். அவர்களில் டேவிட் பென் குரியோன்களும், ஜவாஹர்லால் நேருக்களும் உண்டு. நம் நாட்டின் இரு தலைவர்களும் உண்டு” என்று அவர் கூறினார்.

பென் குரியோனின் இஸ்ரேல் இன்று அடைந்திருக்கும் நிலை குறித்துப் பேசிய அவர், அந்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்கள் நடந்த பின்னரும் அங்கு அரசு அமைய முடியாத நிலைக்கு அந்நாடு சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையின் எம்.பி-க்களில் ஏறத்தாழ பாதி பேர் மீது பாலியல் குற்றம், கொலைக் குற்றம் உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் பல குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனச் சொல்லப்படுவது வேறு விஷயம்” என்றும் அவர் கூறினார்.

அவரது இந்தப் பேச்சு காங்கிரஸ் தலைவர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு அடங்கிய காணொலியைப் பெருமிதத்துடன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE