அமெரிக்க மின்சார உதவித் திட்டத்துக்கு எதிர்ப்பு: கலவர பூமியான காத்மாண்டு!

By ஆர்.என்.சர்மா

நேபாளத்தில் மின்சாரத்தைக் கொண்டு செல்ல உயர் அழுத்த மின்சாரக் கம்பித் தடம் அமைக்கும் திட்டத்துக்கும் சாலை மேம்பாட்டு திட்டத்துக்கும் அமெரிக்க அரசுடன் செய்து கொள்ளப்பட்ட 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து நேற்று (பிப்.16) நடத்திய போராட்டம் தலைநகர் காத்மாண்டுவை உலுக்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழையமுடியாதபடி காவல் துறை தடுப்பு அரண்களை அமைத்திருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அரண்களைத் தகர்த்துவிட்டு நாடாளுமன்றக் கட்டிடம் நோக்கி வரத் தொடங்கினர். அவர்களைத் தடுக்க காவல் துறையினர் நடத்திய தடியடி பலன் தராததால் அடுத்து கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் காவல் துறை மீது அடுத்து கற்களை வீசியதால் பதிலுக்கு அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். முன்னதாக பள்ளி, கல்லூரிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தி மூடச் செய்தனர். போக்குவரத்தும் முடக்கப்பட்டது. கலவரத்திலும் வன் செயல்களிலும் ஈடுபட்ட பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு டாக்சிக்குத் தீ வைக்க முயன்றனர். தடியடி நடத்தியும் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் காவல் துறையினர் அவர்களைக் கலைத்தனர்.

என்ன காரணம்?

இந்தத் திட்டம் புதிதல்ல. 2017-லேயே இரு நாடுகளுக்கும் இடையில் பேசி முடிவு செய்யப்பட்டதுதான். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, நேபாளத்தின் இறையாண்மையைக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை அமெரிக்கா விதிப்பதாகக் கூறி கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

விவாதம் நடத்திய பிறகே இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற நேபாள நாடாளுமன்றம் தீர்மானித்திருந்தது. எனினும், விவாதமே நடத்த முடியாதபடி ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலேயே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. எனவே விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த திட்டம் நிறைவேறுவதை கம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லை. இந்தோ-பசிபிக் ராணுவத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மின்சார உதவி திட்டம் என்றும், இது ராணுவ உள்நோக்கம் கொண்டது, இதை ஏற்றுக்கொண்டால் அமெரிக்க வீரர்கள் நேபாளத்துக்கு வந்துவிடுவார்கள் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா கவலை

இந்த திட்டத்துக்கு எதிராக தவறான கருத்துகளை மக்களிடம் கம்யூனிஸ்ட்டுகள் பரப்புகின்றனர் என்று அமெரிக்க அரசு கவலை தெரிவித்திருக்கிறது. இதனால் இழப்பு நேபாள மக்களுக்குத்தான் என்று அது சுட்டிக்காட்டுகிறது. ஒப்புக்கொண்ட திட்டங்களிலிருந்து இப்படி பின்வாங்குவதால் நேபாளத்தின் நம்பகத்தன்மைக்குத்தான் இழுக்கு என்று நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரகாஷ் சரண் மஹத் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டம் குறித்து ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிற அரசியல் கட்சிகளிடமும் ஆலோசித்து, அவர்களுடைய ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்றத்தின் அடுத்த தொடரில் இதற்கு ஒப்புதல் பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னணி என்ன?

நேபாளம் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் நெருங்குவதை சீனா விரும்பவில்லை. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சீன ஆதரவு நிலையைத்தான் எடுத்துள்ளன. திபெத்தை தனது நாடாக சேர்த்துக்கொண்டுவிட்ட சீனா சிக்கிம், பூடான், லடாக், நேபாளம் ஆகியவற்றையும் தனது பகுதிகளாகவே கருதுகிறது. எனவே அவை தன்னோடு அல்லது தனக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. இந்தியாவுடன் இமயமலைப் பகுதியில் ராணுவ ரீதியிலான மோதலுக்குத் தயாராக இருக்கும் நிலையில் ஏதேனும் வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவும் நேபாளத்துக்கு வந்து போவதை சீனா விரும்பவில்லை. எனவே சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட இடதுசாரிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE