பிரேசில் திடீர் வெள்ளத்தில் 78 பேர் உயிரிழப்பு!

By காமதேனு

பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (பிப்.15) பெய்த பெரு மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ரியோ டி ஜெனிரோ அருகே உள்ள இயற்கை எழில் வாய்ந்த சிறுநகரமான பெட்ரோபோலிஸில், ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாகப் பெய்ததால் அந்நகரே உருக்குலைந்து கிடக்கிறது. நிலச்சரிவிலும் வெள்ளத்திலும் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மீட்புப் குழுவினர் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். நகரமே வெள்ளக்காடாக மாறியதில் கார்கள், மரங்கள், கால்நடைகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

ஹெலிகாப்டர்கள், மோப்பநாய்கள், அகழ் இயந்திரங்கள் துணையுடன் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவரை 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ

நகரமே போர்க்களம் போல் காட்சியளிப்பதாக ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் தற்காலிக ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார். அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றிருக்கும் பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ, இந்தப் பேரிடரை ஒரு துயர நிகழ்வு எனக் குறிப்பிட்டிருக்கிறார். பெட்ரோபோலிஸ் நகர மக்களுக்குத் துணை நிற்பதாகக் கூறிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில் பிரேசில் பேரரசின் கோடைகாலத் தலைநகராக பெட்ரோபோலிஸ் இருந்தது. தற்போது அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே பிரேசில் கடும் புயல்களைச் சந்தித்துவருகிறது. பருவநிலை மாற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தின் விளைவான லா நினாவும் இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. 2011 ஜனவரியில் பெட்ரோபோலிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் புயலால் நிலைகுலைந்தன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE