கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு உலகின் பெரும்பாலான நாடுகள் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, உற்பத்தியில் சரிவு, நுகர்வு போதாமை என்று நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தென்னமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கொலம்பியா நாடு, பொருளாதார நிபுணர்கள் கணித்த அளவைவிட அதிகமாக பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது. உற்பத்தி, வேலைவாய்ப்பில் பெரும்பாய்ச்சல் ஏற்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய நுகர்வோர்கள் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவழிக்கத் தொடங்கியதால் ஜிடிபி வளர்ச்சி 10.6 சதவீதமாக 2021-ல் உயர்ந்திருப்பதுதான் இதில் கவனிக்கத்தக்க சிறப்பம்சம். ஒட்டுமொத்தமாகவே 9.3 சதவீதம் தான் வளர்ச்சி இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். அதையும் தாண்டி கூடுதலாகவே வளர்ச்சி கண்டிருப்பது கொலம்பியர்கள் மனதில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
1906- க்குப் பிறகு கொலம்பியாவின் பொருளாதாரம் இப்போதுதான் இப்படியொரு வளர்ச்சியைப் பார்க்கிறது. அந்த நாட்டில் உற்பத்தியாகும் கச்சா பெட்ரோலிய எண்ணெய், வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, விளையும் காஃபி ஆகியவற்றுக்கு சர்வதேசச் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
தென்னமெரிக்க நாடுகள் அனைத்துமே (லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றும் அழைப்பார்கள்) வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் அந்தந்த நாட்டு மத்திய வங்கிகள் (நம்முடைய ரிசர்வ் வங்கிக்கு இணையானவை) பெருந்தொற்றுக் காலத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்புகள் குறைந்துவிடாமல் பாதுகாக்க அறிவித்திருந்த ஊக்குவிப்புகளையும் வரிச் சலுகைகளையும் ஒவ்வொன்றாகத் திரும்பப்பெற்று வருகின்றன. சொல்லி வைத்ததைப் போல எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே கொலம்பியா வங்கி, தான் தரும் கடன்கள் மீதான வட்டியை 2.25 சதவீதம் அதிகப்படுத்திவிட்டது. இந்த வட்டி வீதம் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கொலம்பியாவில் சில்லறை வர்த்தகத்தில் 21 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பெருந்தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டுவிட்டதால் மக்கள் தாராளமாக எல்லா இடங்களுக்கும் போகத் தொடங்கிவிட்டனர். இதனால் போக்குவரத்து, சுற்றுலா, விருந்தோம்பல் துறைகள் மீட்சி பெற்றுள்ளன. தொழிற்சாலை உற்பத்தியும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு நிலவிய அளவுக்கு ஒட்டுமொத்தமான உற்பத்தி மீண்டிருக்கிறது. பிரேசில், மெக்ஸிகோ, பெரு, சிலே ஆகிய நாடுகளைவிட கொலம்பியாவில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் கொலம்பியப் பொருளாதாரம் 4 சதவீத வளர்ச்சி காணும் என்றும் அந்த நாட்டு மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
வருடாந்திர விலைவாசி உயர்வு வீதம் ஜனவரி மாத த்தில் 6.9 சதவீதமாக அதிகரித்தது. மத்திய வங்கி எதிர்பார்த்ததைவிட இது இரட்டிப்பு அளவாகும். இவ்வளவு இருந்தும் வறியவர்கள் எண்ணிக்கையும் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையும் குறையவில்லை.
கொலம்பியா சிறு குறிப்பு
கொலம்பியா நாடு தென்னமெரிக்கக் கண்டத்தில் இருக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்கிற இரு கண்டங்களிலும் நிலப்பரப்பு கொண்டுள்ளது இதன் சிறப்பு. வடக்கில் கரீபியக் கடலும், கிழக்கில் வெனிசூலாவும், தென் கிழக்கில் பிரேசிலும், தெற்கில் ஈகுவடார் – பெரு ஆகிய நாடுகளும், மேற்கில் பசிபிக் கடலும், வட மேற்கில் பனாமாவும் சூழ்ந்துள்ளன. 32 மாவட்டங்களைக் கொண்டது கொலம்பியா. பரப்பளவு 11,41,748 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,03,72,424. ஜனநாயகக் குடியரசு நாடு. தலைநகரம் - பொகாடோ. நாட்டின் தலைவர் அதிபர் என்று அழைக்கப்படுகிறார். தேசிய மொழி – ஸ்பானியம். அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் ஆங்கிலம், போர்ச்சுகீஸ் மற்றும் 66. மக்களில் 87.58 சதவீதம் பேர் வெள்ளை நிறத்தவர். 6.68 சதவீதம் ஆப்பிரிக்கக் கலப்பினம். மதம் – 88.6 சதவீதம் கிறிஸ்தவர்கள்.
கி.பி. 1499-ல் ஸ்பெயின் நாட்டவர் இங்கே குடியேறினர். பிறகு காலனியாக மாற்றிக்கொண்டனர். 1819-ல் ஸ்பெயினிடமிருந்து கொலம்பியா விடுதலை பெற்றது. கொலம்பியாவுடன் இணைந்திருந்த பனாமா 1903-ல் பிரிந்தது. வெவ்வேறு விதங்களாலான நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் உலகில் 17-வது இடத்தில் இருக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது. அமேசான் மழைக் காடுகள், மேட்டுப்பாங்கான நிலங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள் என்று பலவித நிலப்பரப்பும் கொண்ட நாடு. ஏராளமான பூர்வகுடி மக்கள் வாழ்ந்த நாடு. அட்லான்டிக், பசிபிக் ஆகிய இரு பெருங்கடல்களையும் கடற்கரையோரமாகப் பெற்ற ஒரே தென்னமெரிக்க நாடு கொலம்பியா. நேட்டோ அமைப்பில் உறுப்பினர். கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்த நாடு என்பதால் ‘கொலம்பியா’ என்ற பெயரைப் பெற்றது.