ரஷ்யா - பிரான்ஸ் அதிபர்கள் இடையிலான சந்திப்பில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை தள்ளிவைத்து பேச்சுவார்த்தை நடத்திய புதினால் எழுந்த சர்ச்சைகளுக்கு ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுக்க மும்முரமாக உள்ள ரஷ்யாவை சமாதானப்படுத்த ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இந்த மோதல் உலகப்போருக்கு வித்திடும் என்பதைவிட, ரஷ்யாவை எரிபொருள் தேவைக்காக சார்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவும், போரால் பெரும் பாதிப்படையும் என்பதே பிரதான காரணமாகும். கடந்த சில தினங்களாக பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி போர் பதட்டத்தை தணிக்க முயன்றன.
அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ரஷ்ய அதிபர் புதினை அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பை முன்வைத்து, போர் விவகாரத்தைவிட இருவருக்கும் இடையில் கடைபிடிக்கப்பட்ட விலக்கமே, சர்வதேசளவில் விவாதப்பொருளானது. சுமார் 20 அடி நீள மேசையின் எதிர் திசையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை அமர வைத்து, மறுமுனையில் புதின் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த புகைப்படம் பொதுவெளியில் பகிரப்பட்டபோது, கரோனா கட்டுப்பாடு நடைமுறைகளுக்கு உலகத் தலைவர்கள் முன்னுதாரணமாக இருப்பதாக முதல் சுற்று செய்திகள் வெளியாயின. ஆனால் சந்திப்பில் கடைபிடிக்கப்பட்ட இடைவெளியின் பின்னணி குறித்து பின்னர் வேறு செய்திகள் வெளியாயின.
ரஷ்ய அதிபரை சந்திப்பதற்கு முன்னர் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு ஆட்படுத்தப்படுவார்கள். அந்த பரிசோதனையின் முடிவு அடிப்படையிலே, புதின் அருகே விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ரஷ்யாவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மேக்ரான் உடன்படவில்லை. இதன் காரணமாக மேக்ரானிடமிருந்து நீண்ட இடைவெளியை புதின் கடைபிடித்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், பிரான்ஸ் அதிபர் மறுப்பின் பின்னணியாக, வேறு காரணத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன. ரஷ்ய மருத்துவ பரிசோதனையின் வாயிலாக, பிரான்ஸ் அதிபரின் டிஎன்ஏ மாதிரி ரஷ்யா வசம் செல்லும் என்பதால் மேக்ரான் மறுத்ததாக அவை வரிந்து எழுதின. இதனை அடுத்து ரஷ்யாவில் கரோனா பரிசோதனைக்கு ஆளான உலகத் தலைவர்களை முன்னிறுத்தி, அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் ரஷ்யா வசம் இருப்பதாக, சில புலனாய்வு செய்திகள் பட்டியலிட்டன.
இப்படி பரவும் புரளிகள் மற்றும் செய்திகளால் அதிர்ச்சியடைந்த ரஷ்ய அதிகாரிகள், ரஷ்ய - பிரான்ஸ் அதிபர்கள் சந்திப்பின் பின்னணி குறித்து விரிவான விளக்கம் தந்துள்ளனர். அதில் கரோனா பரிசோதனைக்கு பிரான்ஸ் அதிபர் மறுப்பு தெரிவித்ததே, இரு அதிபர்களும் தள்ளி அமர்ந்ததற்கு காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் டிஎன்ஏ புரளிகளை புறந்தள்ளவோ, அவை குறித்து விளக்கமளிக்கவோ ரஷ்ய தரப்பு மறுத்துள்ளது.