ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நாடு சியரா லியோன். தலைநகரம் ஃபரீடவுன். சமீப காலம் வரை வேலைவாய்ப்புக்காக அலைந்துகொண்டும் வறுமையால் கால் வயிறு, அரை வயிறு உண்டுகொண்டும் இருந்த மொயாம்பா மாவட்டத்துப் பெண்கள், சமீபகாலம் வரை பயனற்றதாக கருதப்பட்ட சதுப்பு நிலங்களை மீட்டு சீர்திருத்தி, ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடி செய்கிறார்கள். ஒரேயொரு பகுதியில் 2020-ல் தொடங்கிய இந்த பசுமைப் புரட்சி இப்போது அந்த நாட்டின் ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவிவிட்டது. பட்டினியிலிருந்து மீண்டதுடன் 150- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மொயாம்பா பகுதியில் மட்டும் வயிறாரச் சாப்பிடுவதுடன் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கிறது. சதுப்பு நிலத்தில் சாகுபடி எளிதல்ல. அயராது பாடுபடும் அப்பெண்கள் தங்களுடைய உடல் வலியைக்கூட பொருள்படுத்தாமல் உழைக்கிறார்கள். எவரிடமும் அடிமையாகப் போய் நிற்காமல், கை ஏந்தாமல் சுயமாக உழைத்துச் சாப்பிடுகிறோம், அமைதியாகிவிட்டது எங்கள் இல்லங்கள் என்று பெருமை பொங்கக் கூறுகின்றனர்.
இந்தப் புரட்சிக்கு மூல காரணம் மாமீ அச்சியான் (45) என்ற உள்ளூர்ப் பெண். விவசாயத் தொழிலாளர்களான பெற்றோர், சிறு வயதிலேயே அச்சியானை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டு தங்களுடன் வயல் வேலைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மேடான நிலங்களில்தான் சாகுபடி செய்வது வழக்கம். அங்கே தண்ணீருக்கு பஞ்சம் என்பதால் வறண்ட நிலத்து விவசாய வேலைகள் மிகவும் கடுமையாகவே இருக்கும். இருந்தும் அச்சியான் அதில் நல்ல தேர்ச்சி பெற்றார்.
பிறகு திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்தன. சியரா லியோன் நாட்டு ஆண்கள் கடின உழைப்பாளிகள் அல்லர். அத்துடன் குடிப்பழக்கமும் உண்டு. இதனால் குடும்பங்கள் அமைதியாக வாழ்வதில்லை. நாட்டிலும் சூழல் சரியில்லை. இந்த நாட்டில் ரூடைல் என்கிற கனிமம் அதிகம். இதிலிருந்து வெண்மையான பொடி எடுத்து அதை பெயின்டுகள், செராமிக்ஸ் ஓடுகள் தயாரிப்புக்குப் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தொழிலில் ஈடுபடும் பெரு நிறுவனங்கள் ஆங்காங்கே அளவுக்கும் அதிகமாக நிலத்தைச் சுரண்டி கனிமத்தை எடுத்தபடியே இருக்கின்றன. போதாவிட்டால் அந்தந்த கிராமத் தலைக்கட்டுகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கேட்பாரற்ற நிலங்களை கனிம அகழ்வுக்கு எடுத்துக் கொள்கின்றன. அப்படியே நல்ல விளை நிலங்களையும் மக்களுடைய வாழிடங்களையும் கூட ஆக்கிரமிக்கின்றன. அவர்களுடைய ஆள் பலம், அரசியல் பலம், அடியாள் பலத்துக்கு எதிராக மக்களால் நிற்க முடிவதில்லை. அடுத்தடுத்து அவர்களுடன் சண்டைக்கு நிற்கவும் முடியாத மக்கள் வறுமையில் ஆழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அந்தப் பெரு நிறுவனங்களும் வேலை தருவதில்லை. இந்தப் பெண்களுடைய கணவன்மார்கள் குடிப்பழக்கத்தாலும் எபோலா என்ற நோயாலும் நடுத்தர வயதிலேயே இறந்துவிடுகின்றனர்.
இப்படி தந்தை, கணவன், சகோதரன், மகன் என்று குடும்ப ஆண்களை இழந்த 150 பெண்களை அழைத்து, இந்த சதுப்பு நிலத்தை மீட்டு விவசாயம் செய்தால் என்ன என்று கேட்டார் மாமீ அச்சியான். வறுமையால் பட்டினியில் வாடுவதைவிட ஏதாவதொரு தொழிலைச் செய்து பார்க்கலாம் என்று பலரும் உடன்பட்டனர். அதையடுத்து ‘தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற சங்கத்தை இப் பெண்கள், தன்னார்வலர்களின் ஆலோசனையின் பேரில் தொடங்கி, அரசிடம் பதிவு செய்தனர். சதுப்பு நிலங்களை மீட்டு நெல் சாகுபடி செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
சதுப்பு நிலங்களுக்குப் பெரு நிறுவனங்களிடமிருந்து போட்டி இல்லை என்பதால் அரசு சரியென்று சொல்லிவிட்டது. முதலில் 150 பேர் 25 ஏக்கர் நிலத்தைத்தான் மீட்டனர். அதிலிருந்த நாணல்களையும் புதர்களையும் முள்ளையும் வெட்டி எடுப்பதே மிகுந்த சவாலாக இருந்தது. அவற்றை அகற்றுவதற்கான நவீனக் கருவிகள் இல்லாததால் வீட்டில் புழங்கும் மண்வெட்டி, கடப்பாரை, கத்தி போன்றவற்றையே பயன்படுத்தினர். நிலத்தில் இறங்கினால் முழங்கால் மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு சேற்று நீரில் கால் புதைந்துவிடும். சேற்று நீரில் நீண்ட நேரம் நிற்பதால் காலில் சேற்றுப்புண் உள்பட பல நோய்களும் வந்தன. சிலருக்குக் காய்ச்சலும் ஏற்பட்டது. தண்ணீரை இறைத்து வெளியேற்றினாலும் மீண்டும் மீண்டும் நீர் சுரந்து ஊற்றெடுக்கத் தொடங்கியது. விவசாயத் துறை அதிகாரிகளிடம் இதைத் தெரிவித்து ஆலோசனைகள் பெற்றனர். பிறகு அந்த நிலத்தின் தன்மைக்கேற்ற விதைகளையும் உரங்களையும் தேர்வு செய்தனர்.
சங்கத்தைப் பதிவு செய்ய ஒவ்வொருவரும் தங்களுடைய கைப்பணத்திலிருந்து 5,000 லியோன்கள் அளித்தனர். பிறகு விதை, உரம் வாங்க தலைக்கு 1,000 லியோன் செலவிட்டனர். கிடைக்கும் வருமானத்தை சரிசமமாக பங்கிட்டுக் கொள்கின்றனர். இதனால் சச்சரவுகள் இல்லை. வயலில் இறங்கிவிட்டால் களைப்பைப் போக்கிக்கொள்ள உற்சாகமாகப் பாடுகிறார்கள். காலை முதல் மாலை வரையில் வயலில் எல்லா வேலைகளையும் குழுக்களாகப் பிரித்துப் பிரித்து செய்கிறார்கள். களை எடுப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, எருவிடுவது என்று எல்லாவற்றையும் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர்கள் உற்சாகமாக கற்றுத்தருகிறார்கள். பணம் சேரச் சேர நவீன விவசாயக் கருவிகளை அரசிடமிருந்து வாங்கி வைத்துள்ளனர். ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளைவிக்கின்றனர். அதில் சாதனையும் படைத்துவிட்டனர். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2 மெட்ரிக் டன் அரிசி கிடைக்கிறது. அதாவது கிடைக்கும் நெல்லை அரைத்தால் 2 டன் அரிசியாகிறது. அரசுக்கே இந்தச் சாதனை பெரிய வியப்பு தந்திருக்கிறது.
இவர்களைப் பார்த்து பக்கத்து ஊர், பக்கத்து மாவட்டம் என்று பரவி இப்போது 4,000 விவசாயிகள் ஆறு மாவட்டங்களில் 2,200 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்கின்றனர். சியரா லியோனில் இப்படி நெல் சாகுபடியாவது சந்தைக்கு அரிசி வரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்த நீரில் இரும்பு, தாமிரம், ஆர்சனிக் போன்ற உலோகங்களும் கலந்துள்ளன. இவை உடல் நலத்துக்குக் கெடுதல் என்பதால் நச்சுகளை நீக்கும் வழிமுறைகளையும் அதற்கேற்ற ரகங்களையும் வேளாண்துறையினர் அவ்வப்போது கற்றுத்தந்து, அறிமுகப்படுத்துகின்றனர். தொடர்ந்து நெல் சாகுபடியே செய்தால் நிலம் சத்தை இழந்துவிடும் என்பதால் சோளம், பருப்பு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றையும் மாற்றுப்பயிராகப் பயிரிடுமாறு பயிர்வாரி முறையையும் கற்றுத்தருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக உணவு திட்டம்’ இந்த வேலைகளைத் தொடங்க இவர்களுக்கு ஊக்குவிப்பாக கைச் செலவுக்கு சிறு தொகையையும் இரண்டு வேளை இலவச சாப்பாட்டையும் அளித்து ஆதரவு தந்தது. தண்ணீர் நிரம்பிய வாய்க்கால்களிலிருந்து நீர் நிலத்துக்குள் புகுந்துவிடாமலிருக்க வரப்புகளை உயர்த்திக் கட்டவும், நீரை வடிக்க வாய்க்கால்களை அமைக்கவும் கருவிகளையும் பண உதவியையும் அடுத்து அளித்தது. இப்போது அறுவடைக்குப் பிறகு நெல் உள்ளிட்ட தானியங்களை அதிக சேதமில்லாமல் விளைபொருளாக்கும் வழிமுறைகளையும் கற்றுத்தருகிறது. சேமிப்புக் கலன்களையும் அளித்து உதவுகிறது.
இந்தப் பெண்கள் விவசாயத்தில் கிடைத்த பணத்தில் குடும்பச் செலவுக்கு எடுத்துக்கொணடது போக எஞ்சியதில் சொந்தமாக உணவு தானியக் கிடங்கு ஒன்றையும் கட்டிக்கொண்டுவிட்டார்கள். அடுத்து பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க இலவசமாக அரிசி வழங்கவும் முடிவு செய்துள்ளார்கள். தாயுள்ளங்களின் கருணைக்கு வரம்பேது. இவர்களுடன் எப்போதும் மல்லுக்கு நின்ற ருடைல் பெரு நிறுவனமும் இப்போது மனம் மாறி, இவர்களை ஊக்குவிக்கும் வகையில் நெல் சாகுபடிக்கு ஆங்காங்கே பாசனக் கிணறுகளை அமைத்துத் தருகிறது. வேளாண் கருவிகளை அளிக்கிறது. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்களையும் கட்டித்தருகிறது. இந்த விவசாய நிலங்களின் குறிப்பிடத்தக்க அம்சம், இவை யாவும் மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே இருக்கிறது. தொலை தூரங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
சியரா லியோன் ஏற்கெனவே விவசாய நாடுதான். பரப்பளவு 71,740 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 70,92,113. தலைநகரம் ப்ரீடவுன். மக்களில் 75 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அடுத்து பெரிய சிறுபான்மைச் சமூகத்தவர் கிறிஸ்தவர்கள். இது மதச்சார்பற்ற குடியரசு நாடு. நாட்டு மக்களில் 60 சதவீதம் பேர் விவசாயம்தான் செய்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 50 சதவீதம் விவசாயம் மூலம்தான் கிடைக்கிறது. விவசாயத் தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். சோதனைகளையே சாதனைகளாக மாற்றிவிட்ட சியரா லியோன் பெண்கள் வணங்கத்தக்கவர்கள். எந்த நாட்டிலும் பெண்கள்தான் வீடும் நாடும் செழிக்கப் பாடுபடுகிறார்கள்.
* பயன்படுத்தப்பட்டிருப்பவை மாதிரிப் படங்கள்