பெருந்தொற்று ஆபத்திலிருந்து மெல்ல விடுபடுகிறதா ஆப்பிரிக்கா?

By காமதேனு

கோவிட் 19 பெருந்தொற்றுச் சூழலிலிருந்து ஆப்பிரிக்கா வெளிவந்து, நீண்டகாலத்துக்கு இந்த வைரஸைக் கையாள வேண்டிய சூழலை நோக்கி நகர்ந்துவருகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்கப் பிராந்திய இயக்குநர் டாக்டர் மட்ஷிடிஸோ மொய்ட்டி கூறியிருக்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை. தொற்றுகளின் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக இருக்கிறது. போதாக்குறைக்கு டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் வேறு அச்சுறுத்திவருகின்றன. இப்படியான சூழலில், ஆப்பிரிக்கா குறித்து மட்ஷிடிஸோ மொய்ட்டி தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. எச்.ஐ.வி தொடங்கி எபோலா வரை ஏகப்பட்ட பாதிப்புகளைச் சந்தித்துவரும் கண்டமான ஆப்பிரிக்கா, அவற்றின் மூலம் ஏராளமான உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்துவருகிறது. ஒமைக்ரான் திரிபும் தென்னாப்பிரிக்காவில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

கரோனாவின் பிடியில்...

2020 பிப்ரவரி 14-ல், ஆப்பிரிக்காவின் வடகிழக்கின் மூலையில் அமைந்திருக்கும் நாடான எகிப்தில் முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எகிப்துக்கு வந்திருந்த ஜெர்மனிக்காரர் ஒருவர்தான் எகிப்தில் முதல் பலியானார். அதன் பின்னர் ஆப்பிரிக்கா கண்டத்தில் பரவத் தொடங்கிய கரோனா பெருந்தொற்றும், அதன் நீட்சியாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும் ஏற்கெனவே ஏழ்மையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை முடக்கிப் போட்டுவிட்டது. பெருந்தொற்றுக் காலத்தில் ஆப்பிரிக்காவில் 4 கோடி மக்கள் மோசமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது. இத்தனைக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஒப்பீட்டளவில் கரோனா தொற்றால் குறைவான பாதிப்புகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா தான். அதேவேளையில், ஆப்பிரிக்காவில் முறையான கணக்கெடுப்பு நடந்ததா என்பதும் கேள்வியும் நீடிக்கிறது.

கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிய காலகட்டத்திலேயே, ஏழை நாடுகளைவிட தடுப்பூசி மருந்துகளைப் பணக்கார நாடுகளே அதிகமான எண்ணிக்கையில் வாங்கிக் குவிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடுப்பூசி அரசியலில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்க நாடுகள்தான். முன்னேறிய நாடுகள் பலவற்றில், மக்களுக்கு 2 தவணைகள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் முதல் தவணை தடுப்பூசிகூட இன்னமும் செலுத்தப்படாமல் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவில், “பெருந்தொற்று கட்டத்திலிருந்து ஆப்பிரிக்கா மாறிக்கொண்டுவருகிறது. வருங்காலத்தில் இந்த வைரஸின் இருப்பை நீண்ட காலத்துக்கு நாங்கள் கையாள வேண்டியிருக்கும்” என்று நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது மட்ஷிடிஸோ மொய்ட்டி கூறியிருக்கிறார்.

தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இன்னமும் ஆப்பிரிக்காவுக்குக் காத்திருக்கின்றன. அதேவேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், கரோனாவின் ஒவ்வொரு அலையையும் எதிர்கொள்வதில் புத்திசாலித்தனமான, துரிதமான, சிறப்பான அணுகுமுறையை ஆப்பிரிக்கா கைக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மட்ஷிடிஸோ மொய்ட்டி பேசினாலும், பெருந்தொற்று இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும், பெருந்தொற்றின் முடிவு விரைவில் ஏற்படும் என்று நாடுகள் நினைப்பது சரியல்ல என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, ஆப்பிரிக்க மக்கள் இன்னமும் பெருந்தொற்று அபாயத்தில்தான் இருக்கிறார்கள் என்றும் டெட்ராஸ் அதானம் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE