சர்ச்சைக்கு ஆளான ‘திருமதி இலங்கை அழகி’: மீண்டும் பட்டம் பறிப்பு!

By காமதேனு

கடந்த வருடம் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வென்றவர், இந்த வருடத்தின் திருமதி உலக அழகிப் போட்டி குறித்த சர்ச்சை கருத்து காரணமாக தனது பட்டத்தை இழந்திருக்கிறார். இந்த பட்டத்தை ஏற்கனவே ஒரு முறை இழந்து மீட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பிகா டி சில்வா என்ற பெண்மணி, கடந்தாண்டு ஏப்ரலில் கொழும்பில் நடைபெற்ற ’திருமதி இலங்கை அழகிப்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் முடிசூட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது கிரீடம் பறிக்கப்பட்டது. திருமதி உலக அழகியாக பட்டம் வென்றவரான கரோலின் ஜுரி என்பவர், மேடையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். திருமதி அழகிப் போட்டியில் கலந்துகொள்வதற்கு திருமணமாகி கணவருடன் வாழ்பவராக இருக்க வேண்டும்; ஆனால் புஷ்பிகா டி சில்வா விவாகரத்தானவர் என்பதால் அந்த பட்டம் முறைப்படி அடுத்த வெற்றியாளருக்கே செல்ல வேண்டும்’ என்று தன்னிச்சையாகஅறிவித்தார். அதன்படியே புஷ்பிகாவின் கிரீடத்தை பறித்து இன்னொரு திருமதி அழகிக்கு அணிவித்தார்.

இந்த சர்ச்சை காவல்நிலையப் புகார் வரை வளர்ந்தது. கரோலின் ஜுரியின் செயல்பாடும் கண்டிப்புக்கு ஆளானது. இதனால் இழந்த கிரீடத்தை மீளப்பெற்றார் புஷ்பிகா டி சில்வா. மேலும், தனது கிரீடத்தை பறித்த கரோலின் ஜுரிக்கு உலக திருமதி அழகிப் போட்டியின் வாயிலாக பதில் சொல்ல முடிவு செய்தார் புஷ்பிகா. அதன்படி கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் புஷ்பிகா பெரும் எதிர்பார்ப்புடன் பங்கேற்றார். ஆனால் அதில் அமெரிக்க திருமதி ஒருவர், திருமதி உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

வெற்றிவாய்ப்பை இழந்த கசப்பில், சமூக ஊடகம் வாயிலாக தனது ஆட்சேப கருத்துக்களை புஷ்பிகா டி சில்வா பதிவிட்டார். அதில் உலக அழகிப் போட்டியின் நடுவர்களை விமர்சித்ததுடன், இலங்கையில் தனது அணியினர் சிலரை குற்றம்சாட்டியும் புகார்களை பட்டியலிட்டிருந்தார். இது உலக அரங்கில் இலங்கைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எனவே, புஷ்பிகாவின் மீதான நடவடிக்கையாக அவரது திருமதி இலங்கை அழகி பட்டத்தை அதிகாரபூர்வமாக பறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் இரண்டாம் முறையாக கிரீடம் இழந்துள்ளார் புஷ்பிகா டி சில்வா. திருமதி இலங்கை அழகி பெயரை விளம்பரத்தில் பயன்படுத்தவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE