கரோனா தளர்வுகளுடன் ஆஸ்கர் விருது விழா!

By காமதேனு

கரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில், இந்த வருட ஆஸ்கர் விருது விழா மீண்டும் இயல்பு உற்சாகத்துடன் தொடங்க இருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எதிர்வரும் மார்ச் 27 அன்று, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. உலகெங்கும் கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடும் ஆஸ்கர் விழா என்பதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவில் கரோனாபரவல் போக்குக்காட்டி வருவதால், நாட்டின் கரோனா கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும் நகரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸும் அடங்குகிறது. இந்த நகரின் கரோனா கட்டுப்பாடுகள் விதிகளின்படி, ஆஸ்கர் போன்ற உள்ளரங்க நிகழ்வுகளில் பங்கேற்போர் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள், தங்களுக்கு கோவிட் இல்லை என்பதற்கான அண்மை பரிசோதனையின் அடிப்படையிலான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறைக்குட்பட்டு பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்கர் விருது ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

டெல்டா அலை உச்சத்தில் இருந்ததால், கடந்த ஆண்டின் ஆஸ்கர் விழாவில் கடும் கட்டுப்பாடுகள் அமலபடுத்தப்பட்டிருந்தன. இம்முறை அவ்வாறு இல்லாததால், கரோனா கட்டுப்பாடுகளில் மேற்கண்டது உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளனர். ஆனால், இந்த தளர்வுகள் விருது பட்டியலில் இடம்பெற்றோர், விருது வழங்குவோர், ஆஸ்கர் விருது விழாவின் நிர்வாகிகள் ஆகியோருக்கு பொருந்தாது. இவர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்திருப்பது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE