“குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட 3 பிரிட்டிஷ் குடிமக்களின் உடல்கள் மீட்கப்பட வேண்டும்!”

By சந்தனார்

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின் 20-வது ஆண்டு நினைவு, இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. 2002 பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் மாதம் வரை நீண்ட இந்தக் கலவரத்தில் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் என அதிகாரபூர்வமாகப் பதிவானது. எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பான விவாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்.9) நடந்தது. அப்போது, தொழிலாளர் கட்சி எம்.பி-யான கிம் லீட்பீட்டர், குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் மூவரின் உடல்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் யார்க்‌ஷையர் மற்றும் ஹம்பெர் பிராந்தியத்தின் பேட்லே மற்றும் ஸ்பென் தொகுதிகளின் பிரதிநிதி எனும் முறையில் பேசிய அவர், மூவரின் மரணம் குறித்து பிரிட்டனில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குஜராத் கலவரத்தில் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிம் லீட்பீட்டர்

இதற்குப் பதிலளித்த பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமெண்டா மிலிங், இந்தக் கோரிக்கையை அரசு ஆதரிக்கும் என்று கூறினார்.

இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம், 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த துயர நிகழ்வு தொடர்பான விவாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்ததைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. அதேவேளையில், பலியானவர்களின் குடும்பங்களின் தரப்பிலிருந்து இந்தியத் தூதரகத்தை யாரும் அணுகவில்லை என்றும் இந்தியத் தூதரகம் குறிப்பிட்டிருக்கிறது.

இறுதிப் பயணம்

கிம் லீட்பீட்டர் தனது உரையின்போது, “2002 பிப்ரவரி 28-ல், தாஜ் மஹாலுக்குச் சென்றுவிட்டு நான்கு சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். அது அவர்களின் வாழ்நாளின் கடைசிப் பயணமாக அமைந்துவிட்டது.அவர்கள் ஷகீல், சயீத் தாவூத், அவர்களின் மருமகன் இம்ரான் (18 வயது) மற்றும் அவர்களின் பால்யகால நண்பர் முகமது அஸ்வத். குஜராத் எல்லைக்குள் அதிக தூரம் சென்றிருக்க மாட்டார்கள். அவர்களது காரை ஒரு ஜீப் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய கும்பல், அவர்களது காரைச் சுற்றிவளைத்து, அவர்களின் மதம் என்ன எனக் கேட்டது. அவர்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்றும், பிரிட்டிஷ் குடிமக்கள் என்றும், விடுமுறையில் வந்திருப்பதாகவும் பதிலளித்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் ஷகீல், சயீத், முகம்மது மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய நால்வர் கொல்லப்பட்டனர். இம்ரான் தாவூத் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்தார். அவர் இப்போது நம்முடன் இருக்கிறார். அவரது வாக்குமூலத்தின்படிதான் அங்கு என்ன நடந்தது என நமக்குத் தெரியவந்தது. தங்களை விட்டுவிடுமாறு சயீதும் ஷகீலும் கெஞ்சியதை அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்” என்று பேசினார்.

“ஷகீலையோ, சயீதையோ அல்லது முகம்மதுவையோ இன்று நம்மால் திருப்பிக் கொண்டுவர முடியாது. ஆனால், அதற்காக எதையும் செய்ய முடியாது என்றோ தாவூதின் குடும்பத்துக்குச் சிறிதளவேனும் ஆறுதலை வழங்க முடியாது என்றோ அர்த்தமாகிவிடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமண்டா மிலிங்

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அமண்டா மிலிங், “2002 கலவரத்தில் பிரிட்டிஷ் குடிமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததிலிருந்து அவர்களின் குடும்பத்தினருக்குத் தூதரக வழி ஆதரவு அளித்திருக்கிறோம். அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். தங்கள் அன்புக்குரியவர்களின் சடலம் திரும்பக் கிடைக்காத வலியில் இருக்கும் குடும்பங்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். இறந்தவர்களின் சடலங்களை மீட்டுக்கொண்டுவருவது தொடர்பாக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதாக அக்குடும்பங்களின் வழக்கறிஞர்கள் பிரிட்டன் அரசிடம் தெரிவித்திருக்கிறார்கள். விண்ணப்பம் அளிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “உலகமெங்கும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் ஒன்றும், உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றுமான இந்தியாவுடன் பிரிட்டனுக்கு ஆழமான உறவு இருக்கிறது. 2002 குஜராத் வன்முறைச் சம்பவம் மோசமானது, துயரகரமானது. இது மதச் சமூகங்களுக்கு இடையில் மரியாதையையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட நீடித்து உழைப்பதற்கான நினைவூட்டல். இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை இது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்துப் பேசிய பிரிட்டனுக்கான இந்தியத் தூதரக அதிகாரி விஸ்வேஷ் நேகி, “இந்தியாவில் அடுத்தடுத்து அமைந்த அரசுகளின் ஆட்சிக்காலத்தில், அந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக நாடாளுமன்ற ரீதியிலான மேற்பார்வையும், நீதித் துறையிலான மேற்பார்வையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. நடாளுமன்றத்தில் சுதந்திரமான விவாதமும், கலந்துரையாடல்களும் நடைபெற்றுவருகின்றன. ஒரு முதிர்ச்சியான ஜனநாயக நாடு எனும் வகையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது விவாதத்தில் பங்கெடுத்தவர்களோ இது தொடர்பாக இதுவரை தங்களை அணுகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE