ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுமென அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம் மற்றும் மரைக்காயர் திரைப்படங்கள், இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளன.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ’ஜெய் பீம்’. பழங்குடியின மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தைப் பதிவு செய்ததற்காக ’ஜெய் பீம்’ திரைப்படம் கொண்டாடப்பட்டது. இதேபோல மோகன்லால் நடித்த ’மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள திரைபடமும், ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த இரு திரைப்படங்களும், நேற்று(பிப்.9) மாலை வெளியான இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் எழுந்துள்ளது.
முன்னதாக 276 திரைப்படங்களை உள்ளடக்கிய சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம், மரைக்காயர் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பட்டியலில் இருந்து வடிகட்டப்படும் 10 படங்களே இறுதிப் போட்டிக்கான பட்டியலில் இடம்பெறும். அந்த வகையில் அறிவிப்பான 10 படங்களில் ஜெய் பீம், மரைக்காயர் ஆகியவை இடம்பெறவில்லை.
இந்தியர்களின் ஏமாற்றத்தை தணிக்கும் வகையில், ஆவணப்படங்களின் பிரிவில் ’ரைட்டிங் வித் ஃபயர்’ என்ற படைப்பு இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ரிந்து தாமஸ், சுஷ்மித் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், பட்டியலினப் பெண்களின் வாழ்வியல் மற்றும் போராட்டம் ஆகியவற்றை, அவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு பட்டியலின பத்திரிகையின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறது.