தமிழர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடுகிறது இலங்கை

By காமதேனு

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஏலம் விடும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அண்மையில் இலங்கை கடற்படையினரால் 58 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நாட்டு படகு உள்ளிட்ட 105 படகுகளை விடுதலை செய்யாமல் இலங்கை அரசு வைத்திருந்தது. படகுகளை விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பல்வேறு கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளையும் இலங்கை அரசு அரசுடமையாக்கியது. அடுத்தகட்டமாக 105 படகுகளும் 5 நாட்கள் ஏலம் விடப்படும் என தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முதல்நாளான இன்று இலங்கை காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 65 விசைப்படகுகள் ஏலம் விடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தந்த துறைமுகங்களில் இருந்து ஏலம் விடப்படுகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்டமாக கோரிக்கை வைத்த நிலையில் படகுகள் இன்று ஏலம் விடப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE