‘சீனாவைவிட இந்தியாவின் உதவியை நாடுவதே இலங்கைக்கு நல்லது!’

By சந்தனார்

பொருளாதார நெருக்கடி, பணவீக்க விகிதம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை எனப் பல்வேறு நெருக்கடிகளில் இலங்கை சிக்கித் தவித்துவருகிறது. கரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது, சரியாகத் திட்டமிடாமல் இயற்கை விவசாயத்தில் இறங்கிய இலங்கை அரசால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் எனப் பல்வேறு காரணிகள் இலங்கையை இன்னலுக்குள்ளாக்கியிருக்கின்றன.

பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து இலங்கை வெளிவர வேண்டும் எனப் பல பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்திவருகின்றனர். இலங்கையில் தற்போது நிலவும் சூழல் இனிமேலும் தொடர்ந்தால், இலங்கை திவாலாகும் நிலை ஏற்படலாம் என ’குளோபல் ஸ்ட்ராட் வியூ’ எனும் பொருளாதாரச் சிந்தனைக் குழு எச்சரித்திருக்கிறது. வாஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இக்குழு, இவ்விவகாரம் தொடர்பாக இலங்கைக்குப் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது.

வெளிநாடுகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை இலங்கையை நெரித்துக்கொண்டிருக்கிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கை, அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து 1 பில்லியன் டாலரை எடுத்துக் கொடுத்துச் சமாளித்தது. சீனாவிடமிருந்து மட்டுமே 5 பில்லியன் டாலரை இலங்கை கடனாகப் பெற்றிருந்தது. இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியின்போது உதவ, சீனா அளித்த 1 பில்லியன் டாலர் தொகை வேறு இலங்கையை மேலும் அழுத்தத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

கடனில் சிக்கவைக்கும் சீனாவின் கொள்கையின் காரணமாகவே இலங்கை இத்தனைப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுவருகிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

இந்நிலையில், இவ்விவகாரத்தை அலசி ஆராய்ந்திருக்கும் ‘குளோபல் ஸ்ட்ராட் வியூ’, 2014-ல் இலங்கையின் ஜிடிபியில் வெளிநாட்டுக் கடன்களின் பங்கு 30 சதவீதமாக இருந்தது. 2019-ல் அதுவே 41.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பும் குறைந்துகொண்டே வருகிறது. எரிபொருள் தொடங்கி உணவுப் பொருள் வரை எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் அந்நியச் செலாவணி முக்கியம் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவிக்கிறது. தற்போது 1.6 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பே மிச்சம் இருப்பதாகவும், சில வாரங்களில் அது கரைந்திவிடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது ‘குளோபல் ஸ்ட்ராட் வியூ’. இதனால் இறக்குமதியில் மேலும் அதிகச் சிக்கல்கள் உருவாகும். 2021 நவம்பர் மாதம் 9.9 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம், டிசம்பர் மாத இறுதியில் 12.1 ஆக உயர்ந்ததையும் அக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இதே காலகட்டத்தில் உணவுப் பற்றாக்குறை விகிதம் 22 சதவீதமாகியிருக்கிறது என்றும் அந்தக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் ஜிடிபி-யில் 10 சதவீதமாக இருக்கும் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சரிவு அந்நாட்டை உலுக்கிவிட்டது. இலங்கையின் பணமதிப்பும் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. சுற்றுலாத் துறையில் பணிபுரிந்துவந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.

இந்நிலையில், ‘ஒரு பிராந்தியம் ஒரு பாதை’ திட்டத்தின் கீழ், இலங்கையில் பெரும் தொகையைச் செலவிட்டிருக்கும் சீனா, அதன் மூலம் இலங்கையின் கடன் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது என்கிறது ’குளோபல் ஸ்ட்ராட் வியூ’. அத்துடன், இலங்கையின் நலனைவிடவும் தனது சொந்த நலனைத்தான் முக்கியமாக சீனா கருதுகிறது என்றும் அந்தக் குழு தெரிவித்திருக்கிறது. சீனாவின் பெரும் முதலீட்டில் அம்பாத்தோட்டை துறைமுக மேம்பாட்டுப் பணிகளால், இலங்கைக்குப் பெரிய அளவில் பலன்கள் இல்லையென்றபோதிலும் சீனாவின் அழுத்தத்தின்பேரில் அதைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கும் அந்தக் குழு, 99 வருடக் குத்தகைக்குச் சீன நிறுவனத்திடம் அந்தப் பணிகளை ஒப்படைக்க இலங்கைக்கு அழுத்தம் தரப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும், கொழும்புவின் கிழக்குப் பகுதியில் சரக்குப்போக்குவரத்து முனையத்தை உருவாக்க சீனா துறைமுகப் பொறியியல் நிறுவனத்திடம் (சிஎச்இசி) இலங்கை அரசு உதவி கோரியதாக அந்தக் குழு குறிப்பிட்டிருக்கிறது.

அம்பாத்தோட்டை துறைமுகம்

இப்படியான சூழலிலும், இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்ய சீனாவின் உதவியை இலங்கை நாடியிருக்கிறது என்று சொல்லும் அந்த அறிக்கை, கடந்த மாதம் இலங்கை சென்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியிடம், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இதுதொடர்பாகக் கோரிக்கை வைத்ததாகவும் சுட்டிக்காட்டுகிறது.

கூடவே, கடனில் சிக்கவைக்கும் சீனாவின் கொள்கையில் சிக்கிக்கொள்ளாமல், இந்தியா போன்ற அண்டை நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அந்தக் குழு யோசனை தெரிவித்திருக்கிறது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

சமீபத்தில், இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் இலங்கைக்குத் தேவையான நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார். இலங்கையின் கட்டமைப்பில் இந்தியாவின் முதலீடு இலங்கைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படி, 500 மில்லியன் டாலர் வழங்குகிறது இந்தியா. 2019-ல், இலங்கையின் கட்டமைப்புப் பணிகளுக்காக மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 450 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியது இந்தியா. 2020-ல் சூரிய மின்சக்தித் திட்டத்துக்காக 100 மில்லியன் டாலரை இந்தியா வழங்கியது. சமீபத்தில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வகையில், 900 மில்லியன் டாலரை வழங்கியிருக்கிறது. இப்போதும் 1 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியாவிடம் இலங்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE