உலகமே இப்போது சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸைவிட, உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து உக்கிரமடைந்துவரும் அமெரிக்க – ரஷ்ய மோதலையே உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. உலகில் மிகப் பெரிய போட்டி வல்லரசுகளாக இருந்தவை அமெரிக்காவும் ரஷ்யாவும். சோவியத் ஒன்றியச் சிதைவுக்குப் பிறகு ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துவிட்டாலும் வீரியம் போகவில்லை. இப்போது அந்த இடத்தை நோக்கி சீனா நகர்ந்துவிட்டது. உலக நாடுகள் பெரும்பாலானவற்றுக்கு அது பொருளாதார ரீதியாகக் கடனுதவி தந்து, அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கவும் பொருட்களை விற்கவும் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தனது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
உலக அரங்கில் வல்லரசு அந்தஸ்தை ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவும் ஓரளவுக்கு இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஜெர்மனியும் பிரான்சும் முன்புபோல கேள்வி கேட்காமல் அமெரிக்காவை ஆதரிப்பதில்லை. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா இவ்வளவு கடுமை காட்டத் தேவையில்லை எனறே ஜெர்மனி கருதுகிறது. அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பலைத் தங்களிடம் வாங்கவிருந்த ஆஸ்திரேலியாவின் மனதை கடைசி நேரத்தில் மாற்றி அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா பெற்றதை வெறும் வியாபாரமாகக் கருதாமல் பெரிய துரோகமாகவே கருதுகிறது பிரான்ஸ். எனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுடனும் அது கசப்புணர்விலேயே பேசுகிறது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பொருளாதாரத் தடை விதிப்பதற்கும் முன்னால், மேலும் ஒரு முறை ரஷ்யாவிடம் பேசுவோம் என்று பிரான்ஸும் ஜெர்மனியும் தனித்தனியாக முடிவெடுத்துள்ளன. அமெரிக்காவின் முடிவை முழுதாக அவை ஏற்கவில்லை என்பது புரிகிறது. அதே வேளையில் மேற்கத்திய நாடுகளுக்குப் பின்னாளில் பேராபத்தாக விளங்கக் கூடிய ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பையும் அனுமதிக்க அவை தயாராக இல்லை. உக்ரைனை நேட்டோ அமைப்பிலும் ஐரோப்பிய சமூகத்திலும் சேர்த்துக்கொள்ள அவை தயாராக இருக்கின்றன.
ரஷ்யா, கிரீமியாவைக் கைப்பற்றியதைப் போல உக்ரைனையும் கைப்பற்றாது என்றாலும் உக்ரைன் நேட்டோ ஒப்பந்த நாடுகள் அணியில் சேர்ந்துவிடக் கூடாது என்று ரஷ்யா அஞ்சுகிறது. சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்திக்கொண்டுள்ள ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டின் தார்மிக ஆதரவைப் பெற்று சற்றே பலம் கூடியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ராணுவ, வர்த்தக மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த இடத்துக்குத் தான் செல்ல வேண்டும் என்று விரும்பும் சீனா, பொருளாதாரத் தடை விஷயத்தில் ரஷ்யாவுக்கு முழு அளவுக்கு ஆதரவு தரும் என்றாலும், அதன் பொருளாதார நலன்கள் என்று பார்த்தால் மேற்கத்திய நாடுகளை மேலும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் சீனாவுக்கு நல்லது.
இந்த யதார்த்தங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் உக்ரைன் விவகாரம் முற்றாது, போர் வராது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பதற்றமோ, போர் ஏற்பாடுகளோ நிற்காது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இப்படி பதற்றத்தைக் கூட்டிக் கொண்டிருந்தால்தான் ரஷ்யா தனக்குத் தேவைப்படும் உறுதிமொழிகளை, சலுகைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளிடம் பேரம் பேசிப் பெற முடியும் என்ற உத்தியை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனிப்பட்ட முறையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவால் அதிகப் பலன் ரஷ்யாவுக்குத்தான். சீனாவின் தயவு ரஷ்யாவுக்குத்தான் தேவை. அதே போல சீனாவுக்கும் ரஷ்யாவைவிட மேற்கத்திய நாடுகளை இப்போதைக்குப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் பொருளாதார ரீதியாக லாபகரமானது. ரஷ்யாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 16 சதவீதம் சீனாவுடனானது. ஆனால் சீனாவின் உலக வர்த்தகத்தில் ரஷ்யாவுடனான வர்த்தகம் வெறும் 2 சதவீதம்தான். பொருளாதார மீட்சியும் வளர்ச்சியும் ஏற்பட்டுவிட்டதாக சீனா அறிவித்துக்கொண்டாலும் அதன் பொருளாதாரம் கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு ஆட்டம் கண்ட நிலையில்தான் இருக்கிறது.
சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தகம் 2024-ல் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும். இப்போதுள்ளதைவிட மேலும் 50 பில்லியன் டாலர்கள்தான் அதிகம். 2021-ல் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சியில் இருந்த சீனப் பொருளாதாரம் இப்போது 4.8 சதவீதமாகத்தான் இருக்கிறது. சீனாவுக்குள்ளேயே மனை-வணிகத் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் சீன மக்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டு எச்சரிக்கையால் இருப்பதாலும் அதன் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் விதித்து அந்நாட்டுடனான வர்த்தகத்தை நிறுத்திவிட்டால் ரஷ்யா மிகவும் தடுமாற நேரிடும். உலக நாடுகள் பெரும்பாலும் ‘ஸ்விஃப்ட்’ என்ற சர்வதேச நிதி-வங்கி பரிமாற்ற அமைப்பின் மூலம்தான் வர்த்தகங்களை மேற்கொள்கின்றன. பெல்ஜியத்தில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
2020-ம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் அன்றாடம் 350 லட்சம் வர்த்தகப் பரிமாற்றங்களைக் கையாண்டுள்ளது. எனவே ரஷ்ய அரசு, நிறுவனங்கள், தனி நபர்களின் பரிமாற்றங்களை இந்த நிறுவனம் கையாளாமல் நிறுத்திவிட்டால் ரஷ்யாவால் பிற நாடுகளுடன் வர்த்தக, தொழிலுறவுகளை மேற்கொள்ள முடியாது. அதற்கு அமெரிக்க டாலர்கள் கிடைக்காது. சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்குள் யுவான், ரூபிள்களைப் பயன்படுத்திக்கொண்டாலும் அதைக் கொண்டு இரு நாடுகளுமே சர்வதேச வர்த்தகத்தில் அதிகப் பயன்களைப் பெற முடியாது. ரஷ்யாவுடனான வர்த்தக உறவைப் போல பல மடங்கு மதிப்புள்ள ஆதாயத்தை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மூலம் சீனா பெற்றுக்கொண்டிருக்கிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக உதவப்போய் தன்னுடைய பொருளாதாரத்தை சீனா மேலும் நாசமாக்கிக்கொள்ளாது. ரஷ்யா மீதான தடை அப்படியே சீனாவுக்கும் பரவினால் அது மேலும் சுமைகளை ஏற்றிவிடும். இந்தக் காரணங்களால் ரஷ்யாவுக்கு சீனா தரும் ஆதரவு உக்ரைன் விவகாரத்தில் அரசியல் நோக்கங்களுக்கானது, வெறும் அடையாளமானது. நிலைமை முற்றினால், ‘போதும் சமரசமாகப் போங்கள், உக்ரைனை ஆக்ரமிக்காதீர்கள்’ என்று கூட ரஷ்யாவுக்கு சீனா ஆலோசனை தெரிவித்துவிடும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். இந்த மோதல் ஒரு உச்சத்துக்குச் சென்று, பிறகு படிப்படியாகத் தணியும் என்கிறார்கள். பார்ப்போம் அப்படி நடக்கிறதா என்று!