ஒலிம்பிக் ஜோதியும் உய்குர் முஸ்லிம் வீராங்கனையும்!

By சந்தனார்

குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதாக ஓர் அரசு விமர்சனத்துக்குள்ளாகும்போது, அந்த பிம்பத்தை மாற்ற சமாளிப்பு முயற்சிகளில் அந்த அரசு இயங்குவது இயல்பு. குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் தலைவர்கள், அந்தப் பிராந்திய மொழியைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் புகழ்ந்துபேசத் தலைப்படுவார்கள். அது அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களால் இன்னும் கேலிக்குள்ளாக்கப்படும் என்பது வேறு விஷயம்.

ஏறத்தாழ அதே வகையில்தான் சீனாவும் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சீனா, பெய்ஜிங்கில் தொடங்கியிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், உய்குர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனையைப் பங்கேற்கச் செய்திருக்கிறது. இது மேற்குலக நாடுகளின் விமர்சனங்களை மழுங்கடிக்கும் தற்காப்பு உத்தி என்றே கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் உள்ள, ‘பேர்ட்ஸ் நெஸ்ட்’ எனும் தேசிய விளையாட்டு அரங்கில் நேற்று ஒலிம்பிக் ஜோதியை இறுதியாகச் சுமந்து ஏற்றிவைத்த இரு வீரர்களில் ஒருவரான டைனிகீர் இலாமுஜியாங், ஜின் ஜியாங் மாகாணத்தில் அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் உய்குர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வீராங்கனை.

ஒலிம்பிக் ஜோதியை இலாமுஜியாங் ஏற்றும் காணொலியை சீன அதிகாரிகள் ட்விட்டரில் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக, இலாமுஜியாங்குக்குக் கிடைத்த இந்த கவுரவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களும் காணொலிகளும் அதிகமாகப் பகிரப்பட்டன.

20 வயதான இலாமுஜியாங், தனது 12 வயதில் க்ராஸ் கன்ட்ரி (பல்வேறு வகையான நிலப்பரப்புகளில் நடத்தப்படும் விளையாட்டுகள்) பனிச்சறுக்கு விளையாடத் தொடங்கியவர். அவரது தந்தையும் பனிச்சறுக்கு வீரர். அவர்தான் இலாமுஜியாங்குக்கு முதல் பயிற்சியாளர். ஜின்ஜியாங் மாகாணத்தில் அட்லே தான் இலாமுஜியாங்கின் சொந்த ஊர். “பனிச்சறுக்கு விளையாட்டின் பிறப்பிடமே அட்லேதான்” என்று சீன ஊடகங்கள் வர்ணிக்கின்றன. 2017-ல் சீனாவின் க்ராஸ் - கன்ட்ரி பனிச்சறுக்கு அணியில் சேர்ந்தவர் இவர். 2019-ல், சர்வதேச பனிச்சறுக்குக் கூட்டமைப்பு நடத்திய போட்டியில், க்ராஸ் - கன்ட்ரி பிரிவில் பதக்கம் வென்ற முதல் சீன வீராங்கனை எனும் பெருமையும் இவருக்கு உண்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றவர்.

ஒலிம்பிக் ஜோதியைச் சுமக்க முழுத் தகுதியும் கொண்டவர்தான் இலாமுஜியாங். எனினும், அவரது பூர்விக நிலமான ஜின்ஜியாங் மாகாணத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் ’மறு கல்வி முகாம்கள்’ எனும் பெயரில் அமைக்கப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள். அங்கு அடைக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அங்குள்ள பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து மேற்கத்திய நாடுகள் சீனாவைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இனப்படுகொலையில் ஈடுபடுவதாகச் சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த விமர்சனங்கள், பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலித்திருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள், இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஆனால், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, தொடக்க விழாவில் பங்கேற்க தனது சார்பில் யாரையும் அனுப்பவில்லை. இதே காரணத்தின் அடிப்படையில், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட சீனாவின் நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு வகைகளில் சீனாவால் ஆதாயம் பெறும் நாடுகளின் தலைவர்களே இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தச் சூழலில், இலாமுஜியானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரம், சர்வதேச விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், இந்த ஏற்பாட்டில் தங்களுக்கும் குறிப்பிட்ட அளவு பங்கு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன், இலாமுஜியான் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்நிகழ்வில் பங்கேற்க எல்லா உரிமையும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை உய்குர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூன்று வீரர் / வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

உய்குர் முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பாக எழுந்திருக்கும் எல்லா குற்றச்சாட்டுகளையும் சீனா மறுத்துவருகிறது. தற்போது, இலாமுஜியான் மூலம் சமாளிப்பு முயற்சியில் இறங்குவதாக எழுந்திருக்கும் விமர்சனங்களையும் அந்நாடு ஏற்கவில்லை.

கல்வான் சம்பவத்தில் காயமடைந்த சீன ராணுவ வீரர் குய் ஃபபாவோ, ஒலிம்பிக் ஜோதியைச் சுமந்துவந்ததைக் கண்டித்து பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவையும், நிறைவு விழாவையும் புறக்கணிப்பதாக இந்தியாவும் அறிவித்திருந்தது. ஒலிம்பிக் போட்டியை அரசியலாக்க வேண்டாம் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE