சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்களும், கிளர்ச்சியாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள். 7 குழந்தைகளும், 3 பெண்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜஸீரா இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
துருக்கி எல்லையில் உள்ள இத்லிப் மாகாணத்தின் ஆட்மே கிராமத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு முன்பாக, ஏராளமான ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியதாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஒரு நபரை வேட்டையாடும் முயற்சியில் இந்தத் தாக்குதலை அமெரிக்க நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதலின்போது, சம்பந்தப்பட்ட நபர் தனது குடும்பத்தினருடன், அந்தக் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிரியாவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக, அமெரிக்க மத்திய கமாண்ட் படையின் தலைமையின் கீழ் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், இப்போதும் அங்கு ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் சுற்றிவருவதாக அங்குள்ள மக்கள் கூறியிருக்கிறார்கள்.
சிரியாவின் வடக்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக அல்-கொய்தா படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. அல்-கொய்தாவிலிருந்து பிரிந்து செயல்படும் தஹ்ரிர் அல்-ஷாம், சிரிய ஜனநாயகப் படை போன்றவை வடமேற்குப் பகுதியில் இயங்கிவருகின்றன.
2019-ல் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள பரிஷா கிராமத்தில் பதுங்கியிருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி, அமெரிக்கப் படைகள் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்ததும் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இத்லிப் மாகாணத்தில் நடந்திருக்கும் மிகப் பெரிய தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.