உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு எதிராகப் படைகள் அனுப்பும் விஷயத்தில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
உக்ரைன் எல்லையில், ரஷ்ய ராணுவத்தின் 92,000 துருப்புகள், கடந்த நவம்பர் மாதம் முதல் குவிக்கப்பட்டிருக்கின்றன. எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவலாம் எனும் நிலை ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்த நிலையிலும் அங்கிருந்து ரஷ்யப் படைகள் அகலவில்லை.
இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக 8,500 பேர் கொண்ட அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. தரைப்படை, விமானப் படை, மருத்துவக் குழுக்கள், உளவுப் பிரிவினர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு ஆதரவாகக் கூடுதல் படைகளை அனுப்புவது குறித்து ஒருதலைபட்சமான முடிவை அமெரிக்கா எடுக்காது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “உக்ரைன் நிலவரத்தையொட்டி, படைகளைக் குவிக்க உத்தரவு இடுவது குறித்து புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். “உக்ரைன் நிலவரம் தொடர்பாக கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள நேட்டோ ஆதரவு நாடுகள் எதுவும் அமெரிக்கப் படைகளை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.