ஐநா அதிகாரிகள் கொலை வழக்கில் 51 பேருக்கு தூக்குத் தண்டனை!

By காமதேனு

காங்கோ நாட்டில் இரண்டு ஐ.நா. விசாரணை அதிகாரிகள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் 51 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள், பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த கிளார்ச்சியாளர்கள் குழுக்களை ஒடுக்கி, அமைதியை ஏற்படுத்த உள்நாட்டுப்படையுடன் ஐநா படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கசை மாகாணத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஐ.நா. சபைக்கு அறிக்கை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஷார்ப் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த ஷைடா ஹடலன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர். அப்போது, வன்முறை நடந்த கசை மாகாணத்தில் இவர்கள் காரில் சென்றபோது கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டடு, 2017ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி கொல்லப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக 54 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஐ.நா. விசாரணை அதிகாரிகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு காங்கோ ராணுவ நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 54 பேரில் 51 பேர் குற்றவாளிகள் என அறிவித்ததோடு, 51 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டபோதும் வழக்கில் தொடர்புடைய 22 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. 51 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதும் காங்கோவில் தூக்குத்தண்டனைக்கு எதிராக சட்டம் உள்ளதால் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE