மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது பெகாசஸ் விவகாரம். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் இணைப்பிதழில், ‘தி பேட்டில் ஃபார் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் பவர்ஃபுல் சைபர்வெப்பன்’ எனும் தலைப்பில் ரோனென் பெர்க்மன், மார்க்ஸ் மாஸெட்டி ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரையில் பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
2019 ஜூன் மாதம், அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் எஃப்.பி.ஐ-க்குச் சொந்தமான கட்டிடத்துக்கு இஸ்ரேலைச் சேர்ந்த மூன்று கணினி பொறியாளர்கள் வருகை தந்தனர். அங்குள்ள ஒரு தனி அறையில் கணினி சர்வர்களைப் பொருத்தினர். அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர்ப் பகுதியான ஹெர்ஸ்லியாவில் உள்ள தங்கள் மேலதிகாரிகளிடம் தொடர்ந்து பேசினர். சர்ச்சைக்குரிய வேவு மென்பொருளான பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
சகல வசதிகளையும் கொண்ட தனியார் நிறுவனமோ, ஒரு நாட்டின் உளவுத் துறை அமைப்புகளோ செய்ய முடியாத அளவுக்கு அசாத்தியமான வேலைகளைச் செய்யக்கூடிய மென்பொருள் பெகாசஸ். ஐஃபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஊடுருவி என்ன வேண்டுமானாலும் பெகாசஸால் செய்ய முடியும் - என்ன வேண்டுமானாலும். வேவு பார்க்கப்படும் நபருக்குத் தெரியாமலேயே, செல்போன் கேமராவை ஆன் செய்து காட்சிகளைக் காணொலிகளாகப் பதிவுசெய்வது வரை எல்லாமே செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் பிரச்சினைக்குரிய ஆவணங்களை அவரது செல்போனில் சேமித்துவைத்து, அவரைச் சட்டத்தின் முன் குற்றவாளியாகச் சித்தரிக்கவும் முடியும்.
குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்படும் இணைப்புகளைச் சொடுக்கினால், பெகாசஸ் வேவு மென்பொருள் செல்போனில் நிறுவப்படும் என்றே முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த மென்பொருள் இதற்காக எந்த இணைப்பையும் சொடுக்க வேண்டியதில்லை என்கிறது இந்தக் கட்டுரை. இது ‘ஜீரோ க்ளிக்’ எனும் தொழில்நுட்பப் பதத்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேவு மென்பொருள் உலகின் மூலையில் எங்கோ ஒருவரின் செல்போனில் படு ரகசியமாக பெகாசஸ் நிறுவப்பட்ட பின்னர், அவரது செல்போன் தொடர்பு எண்கள் தொடங்கி குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் வரை அனைத்தும் நியூஜெர்ஸி எஃப்.பி.ஐ அலுவலகத்தின் அகன்ற திரைகளில் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்பட்டன என்று அதிரவைக்கிறது இந்தக் கட்டுரை.
பெகாசஸ் மென்பொருளை எஃப்.பி.ஐ வாங்கியிருந்தது அமெரிக்கர்களை வேவு பார்க்க அல்ல. உண்மையில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை வேவு பார்க்க முடியாத அளவில்தான் பெகாசஸ் மென்பொருளை என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கியது. ஆனால், அதை வைத்து வேறு சில வேலைகளை எஃப்பிஐ செய்தது. சோதனை பயிற்சியின்போது புதிய செல்போன்களை வாங்கி, வெளிநாடுகளின் சிம் கார்டுகளைப் பொருத்திதான் சோதனை முயற்சிகளை எஃப்.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்டனர். அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை, பெகாசஸை வாங்கிப் பயன்படுத்தும் பிற நாட்டினர் ஊடுருவ முடியாது. அமெரிக்க நிறுவனங்களும் பெகாசஸைப் பயன்படுத்தி சக அமெரிக்கர்களை வேவு பார்க்க முடியாது. ஈவு இரக்கம் இல்லாமல் உலகமெங்கும் உளவு வேலைகளுக்குத் துணை நிற்கும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான அச்சத்தின் காரணமாக அதைச் செய்யவில்லை.
எனினும், அதற்காகப் பிரத்யேகமாக ‘ஃபாந்தம்’ (Phantom) எனும் புதிய தொழில்நுட்பத்தையும் என்எஸ்ஓ நிறுவனம் பரிந்துரைத்தது. அதை வைத்து அமெரிக்கர்களை வேவு பார்ப்பது தொடர்பாக எஃப்பிஐ அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் போன்றோர் விவாதித்துவந்தனர். இதற்கிடையே, 5 மில்லியன் டாலர் தொகை அளித்து, என்எஸ்ஓ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எஃப்பிஐ புதுப்பித்துக்கொண்டது. தொடர்ந்து நடந்த விவாதங்களின் முடிவில் என்எஸ்ஓ தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில்லை என எஃப்பிஐ முடிவெடுத்தது.
அதே காலகட்டத்தில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபார்பிடன் ஸ்டோரீஸ் ஆகிய அமைப்புகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த16 ஊடகங்களும் சேர்ந்து சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா, பஹ்ரைன், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாகத் தெரியவந்தது.
இதற்கிடையே, ஜிபூட்டி எனும் ஆப்பிரிக்க நாட்டின் அரசுக்கு உதவ பெகாசஸை எஃப்பிஐ பயன்படுத்தியிருக்கிறது. அந்நாட்டில் கிளர்ச்சியாளர்களை வேவு பார்த்து அவர்களை ஒடுக்க பெகாசஸை அமெரிக்க அரசு பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டாலும், அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகம் என்பது விமர்சனத்துக்குள்ளானது. அங்கு பத்திரிகையாளர்கள், அரசை விமர்சிப்பவர்கள் போன்றோர் சித்திரவதை செய்யப்படுவதாகப் புகார்கள் உண்டு.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரின் போனை பெகாசஸ் மூலம் ஊடுருவி, வேவு பார்த்து அவரைக் கைதுசெய்தது அந்நாட்டு அரசு. அகமது மன்சூர் எனும் அந்த நபர், அரசை விமர்சித்து ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எழுதியதால் குறிவைக்கப்பட்டார். மின்னஞ்சல் வேவு பார்க்கப்பட்டது. அவர் இருக்கும் இடம் ஒற்றறியப்பட்டது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.40 லட்சம் டாலர் திருடப்பட்டது. கடைசியில் அவர் வேலையை பறிபோனது. மர்ம நபர்கள் சாலையில் அவரைத் தாக்கினர். இப்படிப் பல்வேறு அச்சுறுத்தல்களையும் பாதிப்பையும் எதிர்கொண்ட அகமது மன்சூர் 2018-ல் கைதுசெய்யப்பட்டார். 10 வருடச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதே ஆண்டில் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே அவரது செல்போனிலும் அவரது மனைவியின் செல்போனிலும் பெகாசஸ் ஸ்பைவேரை நுழைத்து வேவு பார்க்கப்பட்டதாகப் பின்னர் தெரியவந்தது. இப்படி பல நாடுகளில் பெகாசஸால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன.
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், உளவு விஷயத்திலும் உலக நாடுகள் அனைத்தையும்விட ஒரு படி மேலே நிற்கும் தேசம். 1950-களிலேயே தனது வெளிநாட்டு உளவு அமைப்பான மொஸாட் மூலம், தனது எதிரி நாடுகளிலும் ரகசியத் தொடர்புகளை வளர்த்து ஆயுதங்களை வழங்கி உலகமெங்கும் வலைத்தொடர்புகளை வளர்த்தெடுத்துக்கொண்டது இஸ்ரேல்.
1980-களில் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இஸ்ரேல் முன்னணி தேசமானது. அதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றம், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உளவு பார்ப்பது என வளர்ந்தது இஸ்ரேல். அப்படித்தான் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஹெர்ஸ்லியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தத் தனியார் நிறுவனத்தில், உலகமெங்கும் 700-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகிறார்கள்.
2011-ல் பெகாசஸை என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிவிட்டாலும், அதை வாங்குவதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. ஏனெனில், இஸ்ரேலியத் தனியார் நிறுவனங்களில் உளவுத் துறையில் பணியாற்றியவர்களும் இருப்பார்கள். எனவே, மற்றவர்களை வேவு பார்க்க பெகாசஸை வாங்கி தங்கள் ரகசியங்களை இஸ்ரேலிடம் - மொஸாடிடம் பறிகொடுப்பதா என்பதே அந்தத் தயக்கத்துக்குக் காரணம்.
இதைப் புரிந்துகொண்ட என்எஸ்ஓ, இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தது. நாஜிக்களின் யூத இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தப்பியவரும், பெரும் மதிப்புக்குரிய ராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஆவிக்டார் பென் - கால் அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பெகாசஸ் வேவு மென்பொருளை என்எஸ்ஓ நிறுவனம் இயக்காது. அரசுகளுக்கு மட்டும்தான் பெகாசஸ் விற்கப்படும்; தனிநபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ விற்கப்படாது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை அளித்தது. முதல் போணியாக மெக்ஸிகோ கிடைத்ததும் அதன் பின்னர் நடந்தவையும் இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், இந்தக் கட்டுரை பெகாசஸை மோடி அரசு வாங்கியதாகச் சுட்டிக்காட்டுவது இந்தியாவில் மீண்டும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. 2017 ஜூலையில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் கடற்கரையில் உலவினார். இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டது, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது வரை பல தகவல்கள் தலைப்புச் செய்திகளாகின. ஆனால், அந்தச் சமயத்தில்தான் பெகாசஸ் வேவு மென்பொருளை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்கிறது இந்தக் கட்டுரை. 2 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதாகச் சொல்லப்பட்டது. அதில் பெகாசஸும் அடக்கம் எனத் தற்போது சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்குப் புயலைக் கிளப்பியிருந்தது. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதி என ஏறத்தாழ 300 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல்களால் வெகுண்டெழுந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கின. ஆனாலும் மத்திய அரசு அசைந்துகொடுக்கவில்லை.
இந்தப் புகார் எழுந்ததும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஜெர்மனி காவல் துறையினர் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. பயங்கரவாதம், திட்டமிடப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவே, அதிலும் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கவே பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியதாக ஜெர்மன் காவல் துறை விளக்கம் சொன்னது.
ஆனால், இந்தியாவில் அரசை வாய் திறக்கவைக்க பெரும் பிரயத்தனம் தேவைப்பட்டது. பெகாசஸ் விவகாரம் பெரிய அளவில் வெடித்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாகச் சொன்ன மத்திய அரசு, அதன் பின்னர் காத்திரமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டியே, இது தொடர்பாக எதையும் பேச அரசு விரும்பவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இவ்விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றமே ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவ, டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழு, 8 வாரங்களில் விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்துக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையால், அரசை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன. இது தேசத் துரோகம் என்று ராகுல் காந்தி விமர்சிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், நிக்ஸன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் நடந்த ‘வாட்டர்கேட்’ ஊழலுடன் ஒப்பிட்டு பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, மோடி அரசை விமர்சித்திருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.
பிரதமர் மோடி இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் போன்றோர் தி நியூயார்க் டைம்ஸ் இதழைச் சரமாரியாக விமர்சித்துவருகின்றனர்.
இது தேர்தல் காலம் வேறு. பாஜகவுக்கு இது நிச்சயம் தலைவலிதான்!