வாங்கியது ரூ.500; விற்றது ரூ.16.4 லட்சம்... இன்ப அதிர்ச்சியில் பெண்!

By காமதேனு

பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில் 500 ரூபாய்க்கு வாங்கிய மர நாற்காலியை, 16.4 லட்சம் ரூபாய்க்கு பெண் ஒருவர் ஏலத்தில் விற்றுள்ளார். இந்த ஆச்சரிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தில் கிழக்கு சக்செக்ஸ் அருகே பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில், 500 ரூபாய்க்கு மர நாற்காலி ஒன்றை பெண் ஒருவர் வாங்கியுள்ளார். அப்போது, அந்த நாற்காலி கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. பின்னர் அந்த நாற்காலியை விற்பனை செய்வதற்காக, மதிப்பீட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார் அந்தப் பெண். ​​​​அவர், அந்த நாற்காலி 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள அவாண்ட் கார்ட் கலைப் பள்ளியில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்தார். அந்த நாற்காலி 1902-ம் ஆண்டில் ஆஸ்திரியாவின் பிரபல ஓவியர் கொலோமன் மோசர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பெண் நாற்காலியை ஏலத்தில் விட முடிவு செய்தார். அதன்படி, இங்கிலாந்தில் உள்ள ஸ்டான்ஸ்டெட் மவுண்ட்ஃபிட்செட்டின் ஸ்வார்டர்ஸ் என்ற கடையில் ஏலம் நடைபெற்றது. அப்போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டீலர் ஒருவர் அந்த நாற்காலியை 16,250 பவுண்டுகளுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.16.4 லட்சத்துக்கு வாங்கினார். 500 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலி, பல லட்சத்துக்கு விலைபோனதால் அந்த பெண் இன்ப அதிர்ச்சியடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE