‘வயதான சர்வாதிகாரி’, ‘பகுத்தறிவற்றவர்’: புதினை வாரும் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்!

By காமதேனு

உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் எனும் சூழல் நிலவிவரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன், ‘வயதான சர்வாதிகாரி’ என்றும் ‘பகுத்தறிவற்றவர்’ என்றும் புதினை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சிட்னியிலிருந்து இயங்கிவரும் ‘2ஜிபி’ வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பீட்டர் டட்டன், “உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவி அழிவை ஏற்படுத்துவதைத் தடுக்க உலக நாடுகள், ரஷ்யாவுக்குக் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், “புதினுக்கு 69 வயதாகிறது. பொதுவாகவே இதுபோன்ற சர்வாதிகாரிகள், முதுமையடையும்போது தங்கள் அடையாளத்தை விட்டுச்செல்ல விரும்புவார்கள். அப்போது மேலும் மேலும் பகுத்தறிவற்றவர்களாக மாறுவார்கள்” என்று விளாசித் தள்ளியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

சர்வதேச நிகழ்வுகள் குறித்து, அதிரடியாகக் கருத்து தெரிவிக்கத் தயங்காதவர் பீட்டர் டட்டன். பிற நாடுகளைச் சீனா குறைத்து மதிப்பிடுவதாகவும், அமைதியைக் குலைக்கும் வகையில் ராணுவ பலத்தை அதிகரிப்பதாகவும் கடந்த ஆண்டு அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தைவான் விவகாரத்திலும் அவர் தலையிடுவதாகச் சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இப்போதும் சீனா குறித்து தொடர்ந்து அவர் விமர்சித்துவருகிறார். போர் வெறியுடன் செயல்படுவதாகச் சீனாவை ஒரு பிடி பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜியாவ் குயான், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சரியான பாதைக்குத் திரும்பியிருப்பதாக கூறியிருக்கும் நிலையில், பீட்டர் டட்டன் இவ்வாறு விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE