உலக அளவில், ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் 221 நாடுகளுக்குப் பரவி 3-வது அலை, 4-வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 7.41 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,98,284 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் பிரான்சில் 4.28 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 2.19 லட்சம் பேருக்கும், ஸ்பெயினில் 1.33 லட்சம் பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. இதுவரை 4,03,69,585 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.