தேசிய தினங்கள்: இந்தியாவுடன் இணைந்து கொண்டாடும் ஆஸ்திரேலியா!

By காமதேனு

இரு நட்பு தேசங்கள் ஒரே நாளில் தங்களது தேசிய தினங்களை கொண்டாடுவது சுவாரசியமான ஒற்றுமைக்கு உரியது. அப்படித்தான் இந்தியாவின் குடியரசு தினமும், ஆஸ்திரேலியாவின் ஆஸ்திரேலிய தினமும் ஜன.26 அன்று கொண்டாடப்படுகின்றன. இதனை ஆஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசன் ‘தற்செயல் அதிசயம்’ என்று கடந்த வருடம் தனது வாழ்த்து செய்தியில் பகிர்ந்திருந்தார்.

ஒரு கண்டமே நாடாக இருப்பதும், அழகான கடற்கரைகளும், அச்சுறுத்தும் பாலைவனங்களும், அரிய கானுயிரிகளும் ஒரு தீவு தேசத்தின் அடையாளமாக இருப்பதும்கூட அதிசயமே. உலகம் முழுக்க தனது காலனியாதிக்கத்தை உருவாக்கத் துடித்த பிரிட்டனின் பிடியில் சிக்கி, அதன் குடியேறிகள் கால் வைத்த நாளாகவும், 1788ஆம் ஆண்டில் ஆர்தர் பிலிப் என்பவரால் முதல் குடியேற்றம் அங்கு உருவானதன் நினைவாகவும் ஜன.26 அன்று ஆஸ்திரேலியா தினம் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலிய தினம் 1808 முதல் கொண்டாட ஆரம்பித்தாலும், 1935 முதல் அதிகாரபூர்வமாக அனுசரிக்க ஆரம்பித்தார்கள்.

பிரிட்டன் இங்கு கால்வைப்பதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஸ்பெயின், ஹாலந்து, பிரான்ஸ், போர்ர்ச்சுக்கல் தேசங்களில் இருந்தும் குடியேறிகள் சிறிது சிறிதாக குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் பிரிட்டனுக்கு எதிராக கலகம் மூண்டபோது, கைதிகளின் எண்ணிக்கை தாங்காது சிறைகள் ஸ்தம்பித்தன. அப்போதுதான் ஆஸ்திரேலிய காலனியாதிக்க திட்டமும் பிரிட்டனிடம் உருவாகி இருந்தது. எனவே, சிறைபட்டிருந்த கைதிகளில் கட்டுமானம் உட்பட பல்வேறு தனித்திறன் பெற்றவர்களை பொறுக்கியெடுத்து அவர்களுடன் ராணுவ வீரர்களையும் கப்பல்களில் அனுப்பி, ஆஸ்திரேலியாவில் புதிய நகரியங்களை உருவாக்க முயன்றார்கள்.

அப்படி கைதிகளால் கட்டியெழுப்பப்பட்ட தேசம் என்ற பெருமையும் ஆஸ்திரேலியாவுக்கு உண்டு. இதர குடியேற்ற தேசங்களைப் போலவே பூர்வகுடிகளை சிதைத்து, அந்த ரத்த சுவடுகளில் உருவான நகரங்கள் ஆஸ்திரேலியாவிலும் உண்டு. அம்மக்கள் துயர நாளாகவும் இந்த தினத்தை நினைவுகூர்வார்கள். பல்வேறு தேசம், மொழிகள், கலாச்சாரங்கள் என பன்முகப் பின்னணியில் பிரிந்து கிடந்தபோதும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் தினமாக ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா உணர்வாலும் நெருங்கி இருக்க்கிறது.

நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் போல, ஆஸ்திரேலிய தினத்தன்று அங்கே சிறப்பு அணிவகுப்பு நடைபெறும். குடியேறிகளால் உருவான தேசத்தின் நாளன்று புதிய குடியுரிமை வழங்கபடும் வைபவமும் நடைபெறும். சுமார் இரண்டரை கோடி மக்களே வாழும் ஆஸ்திரேலியாவில் இன்றைக்கும் குடியேறிகள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் நாடற்ற ஏதிலிகளுக்கு புகலிடம் தரும் தேசமாகவும் ஆஸ்திரேலியா அடையாளம் காணப்படுகிறது. ஆஸ்திரேலிய தினம் பொது விடுமுறை நாள் என்பதால் இன்று அங்கே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE