புர்கினா ஃபாஸோவில் ராணுவப் புரட்சி: ஆட்சி மாற்றத்தை மக்கள் வரவேற்பது ஏன்?

By சந்தனார்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் உச்சமடைந்து, ராணுவப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபராக இருந்த ரோச் காபோரே பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் நடந்திருக்கும் நான்காவது ராணுவப் புரட்சி இது. இதற்கு முன்பு மாலி, கீனி, சாட் ஆகிய நாடுகளில் ராணுவப் புரட்சி நடந்தது. பலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அதிபர் எங்கு இருக்கிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

நடந்தது என்ன?

பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான நாட்டுப்பற்று இயக்கத்தினர் (எம்பிஎஸ்ஆர்) எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்று அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியது. லெப்டினன்ட் கர்னல் பால் ஹென்றி சாண்டாகோ டாமிபாவால் வழிநடத்தப்படும் அந்த ராணுவக் குழு, நாடு தங்கள் வசம் வந்துவிட்டதாகவும், அரசும் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தது. பால் ஹென்றி எழுதி கையெழுத்திட்டிருந்த அறிகையை வேறொரு அதிகாரி வாசித்தார். நேற்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதாகவும் ராணுவக் குழு அறிவித்தது. உடல்ரீதியான வன்முறை ஏதுமின்றி ஆட்சியைப் பிடித்திருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்தில் அடைக்கப்பட்டு மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதாகவும் ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், தலைநகர் வொகேடூகுவில் உள்ள அதிபர் இல்லம் அருகே துப்பாக்கி முழக்கங்கள் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

“ராணுவத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய எம்பிஎஸ்ஆர், அதிபர் காபோரேயின் பதவியை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தது” என அந்த அறிக்கையை வாசித்த ராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.

ஏழ்மையான நாடு

பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த புர்க்கினா ஃபாஸோ, 1960-ல் விடுதலையானது. தங்கச் சுரங்கங்கள் அதிகம் கொண்ட தேசம் என்றாலும் ஆப்பிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. பல முறை ராணுவப் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்புகளை எதிர்கொண்ட நாடு அது.

சமீபகாலமாக, இஸ்லாமியக் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கையாள முடியாமல் காபோரே அரசு தடுமாறியதாக, அரசை அந்நாட்டு ராணுவம் விமர்சித்திருந்தது.

ரோச் காபோரே

சர்வதேச எதிர்வினைகள்

ச்ராணுவத்தினரால் அதிபர் கைதுசெய்யப்பட்ட தகவல் தங்களுக்குத் தெரியும் என்றும், அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது. ராணுவப் புரட்சியைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஐநா பொதுச் செயலர் அன்டோனி குத்தேரஸ் ட்வீட் செய்திருக்கிறார். பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ராணுவப் புரட்சியைக் கண்டித்திருக்கின்றன.

எனினும், புர்கினா ஃபாஸோ மக்கள் மத்தியில் ராணுவப் புரட்சிக்கு ஆதரவு நிலவுகிறது. நிர்வாகத் திறமையற்ற காபோரேயின் அரசால் ஊழல், அரசு நிர்வாகச் சிக்கல்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என்றும், அதன் காரணமாக ஆயுதம் ஏந்திய இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழுக்கள் தலையெடுத்ததாகவும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இந்தப் புரட்சியை அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE