அமெரிக்காவின் முந்தைய அதிபர் ட்ரம்ப் மீதான பல்வேறு விமர்சனங்களில் ஒன்று அவர் ஊடகவியலாளர்களைக் கடுமையாக விமர்சித்தது. செய்தியாளர் சந்திப்புகளில் ஊடகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியாத சமயங்களில், அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்துவிடுவார் ட்ரம்ப்.
அவருக்கு எல்லா வகையிலும் மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அதிபர் ஜோ பைடனும் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை என்றே தெரிகிறது. நேற்று (ஜன.24) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பணவீக்கம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய செய்தியாளரை மோசமான வார்த்தையைப் பயன்படுத்தித் திட்டினார் பைடன். மைக் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா எனத் தெரியாமல், தனக்குத் தானே அவர் முணுமுணுத்துவிட்டார் எனக் கருதப்படுகிறது. எனினும், அவர் பேசியது காணொலியில் துல்லியமாகவே பதிவாகிவிட்டது.
கேள்வியைக் கேட்டவர், ‘ஃபாக்ஸ் நியூஸ்’ சேனலைச் சேர்ந்த செய்தியாளரான பீட்டர் டூக்கி. இந்தச் சேனல் குடியரசுக் கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக விமர்சனங்கள் உண்டு. ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை மோசமாகச் சித்தரிப்பதாகவும் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இந்நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, “பணவீக்கம் என்பது ஓர் அரசியல் ரீதியான சுமை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பீட்டர் டூக்கி கேட்டார். அப்போதுதான் கெட்டவார்த்தைப் பிரயோகத்துடன் அவரை அர்ச்சித்திருக்கிறார் அதிபர் பைடன்.
சமீப காலமாக, செய்தியாளர்கள் மீது இப்படிச் சீறுவது பைடனின் வழக்கமாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா தொடர்பாகக் கேள்வி எழுப்பிய ஃபாக்ஸ் நியூஸ் சேனலின் பெண் நிருபரிடம், “என்ன ஒரு முட்டாள்தனமான கேள்வி!” என்று பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.