‘சிறிய ராட்சதர்க’ளைக் களமிறக்கும் சீனா: பின்னணி என்ன?

By காமதேனு

நவீனத் தொழில்நுட்பத் துறையில் மேற்கத்திய நாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும், அத்துறை சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கமளிப்பதில் சீன அரசு முழு மூச்சாக இறங்கியிருக்கிறது. இது குறித்த செய்தியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்படும் ’குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாகச் செயல்படும் அதிநவீன சாதன உற்பத்தி நிறுவனங்கள் அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தால் ‘சிறிய ராட்சதர்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களை வளர்த்தெடுக்க பெய்ஜிங் பங்குச் சந்தை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது.

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, இந்நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் அந்நாட்டு அரசு சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, சீனாவில் இதுபோன்ற 4,762 நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்க சீனா திட்டமிடுகிறது.

நவீனத் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்த நிறுவனங்களை வளர்த்தெடுப்பது சீன அரசின் நோக்கம். இந்த நிறுவனங்களை ‘மறைந்திருக்கும் சாம்பியன்கள்’ என்றும் சீன அரசு செல்லமாக அழைப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE